நான் செஞ்சது தப்புத்தான்...! என்னை மன்னிச்சிடுங்க...! சிறுமியின் பெற்றோரிடம் கதறிய பள்ளி தலைமை ஆசிரியர்!
ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உண்மைதான் என்றும், தான் தவறு செய்து விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் என்று மாணவியின் உறவினர்களிடம் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயபாலன் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை, பெருங்குடியில் மான்ஃபோர்ட் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பாதிரியார் ஜெயபாலன் இருந்து வருகிறார். இந்த பள்ளியில் எல்.கே.ஜி. முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை சுமார் இரண்டாயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பெருங்குடி, கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்த பதினொன்று வயது சிறுமி, 5 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
வழக்கமாக பள்ளி சென்று வந்த அந்த சிறுமி, கடந்த இரண்டு மாதங்களாக பள்ளி செல்ல மறுத்து வந்துள்ளார். இது குறித்து, சிறுமியின் பெற்றோர் விசாரித்தபோது, தலைமை ஆசிரியர் ஜெயபாலன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
பள்ளி தலைமையாசிரியர் ஜெயபாலன் மீது கொடுக்கப்பட்ட புகாரை, துரைப்பாக்கம் போலீசார் வாங்க மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் உறவினர்கள், நேற்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசாரிடம் சிறுமியின் பெற்றோர் புகார் கூறினர். அப்போது, போலீசாரின் காலில் விழுந்து எங்களது புகாரை ஏற்றுக்கொள்ளும்படி சிறுமியின் பெற்றோர் கூறினர். இதையடுத்து போலீசார் அந்த புகாரை பெற்றுக் கொண்டு, தலைமை ஆசிரியர் ஜெயபாலனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணை முடிந்ததும், ஜெயபாலனை, துரைப்பாக்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெரியம்மாவிடம் கேட்டபோது, நள்ளிரவில் எழுந்து என்னுடைய மகள் திடீரென கதறி அழுதாள். அதைக்கேட்டு என்னுடைய தங்கை எழுந்து அவரிடம் விசாரித்துள்ளார். அவள் சொன்னதைக் கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். தலைமை ஆசிரியரால், அவள் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டிருப்பதைப் பார்த்துதான் போலீஸ் நிலையத்துக்கு சென்றோம்.
அங்கு எங்களின் புகாரை பெறாத நிலையில்தான், போலீசாரின் காலில் விழுந்த பிறகுதான் ஜெயபாலன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். போலீஸ் நிலையத்தில் நடந்த விசாரணையின்போது, தலைமை ஆசிரியர் ஜெயபாலன், எங்களிடம் நான் செஞ்சது தவறுதான். மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
ஆனாலும், அவர் செய்த காரியத்தை எங்களால் மன்னிக்க முடியாது. எங்கள் புகாரின் பேரில் அவர் மீதான நடவடிக்கைக்கு உறுதியாக உள்ளோம். அதன் பிறகுதான் ஜெயபாலனை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கையால், மாணவிகள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
மாணவி தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஜெயபாலனை கைது செய்துள்ளோம். இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா? என்றும் விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீசார் கூறினர்.