Asianet News TamilAsianet News Tamil

கலப்பு பயிர் மற்றும் ஊடுபயிர் சாகுபடி செய்வதால் என்னென்ன பயன்கள் கிடைக்கிறது?

What are the benefits of mixed crop and intercourse cultivation?
What are the benefits of mixed crop and intercourse cultivation?
Author
First Published May 16, 2018, 1:55 PM IST


கலப்பு பயிர் மற்றும் ஊடுபயிர் சாகுபடியால் கிடைக்கும் பயன்கள்...

** வயல் மட்டத்திலிருந்து வரப்பின் ஓரத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கு உயரத்தில் தட்டை பயறு விதைக்க வேண்டும். இந்த தட்டை பயறில் நெற்பயிரை தாக்காத அசுவினிகள் உற்பத்தியாகும். இதனால் ஏராளமான பொறிவண்டுகள் கவரப்படும். இந்த பொறிவண்டுகள் நெற்பயிரை தாக்கும் பலவிதமான சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுபடுத்துகின்றன.

** நிலக்கடலையில் ஆமணக்கு செடிகளை வயல் ஓரங்களில் 2 மீட்டருக்கு ஒரு செடி வீதம் நடவு செய்வதால் புரோடீனியா புழுக்களை கவர்ந்து அழிக்கலாம்.

** நிலக்கடலையோடு 250 கிராம் கம்பு சேர்த்து கலப்பு பயிராக விதைத்து நிலக்கடலையை தாக்கும் சுருள்பூச்சி, இலைப்பேன் மற்றும் அந்துபூச்சியின் சேதத்தை கட்டுப்படுத்தலாம்.

** 10 வரிசை நிலக்கடலைக்கு ஒரு வரிசை என்ற அளவில் ஊடு பயிராக செய்து பொறிவண்டுகளின் பெருக்கத்தை அதிகரிக்கலாம். சிவப்பு கம்பளிப்புழு தாக்குதல் காணப்படும் பகுதிகளில் 5 வரிசை நிலக்கடலைக்கு ஒரு வரிசை தட்டை பயிரை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.

** துவரை, பாசிப்பயறு ஆகியவற்றுடன் சோளம் ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம் தத்துப்பூச்சி மற்றும் காய்ப்புழுக்களின் எண்ணிக்கையை கட்டுபடுத்தலாம்.

**  பருத்தியின் ஓரங்களில் மக்காச்சோளம் பயிரிடுவதால் அசுவினி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ, அந்துபூச்சிகள் போன்றவை அச்செடி மேல் படும் போது ஊண் விழுங்கிகள் மக்காச்சோளம் பயிரில் அதிகமாக உற்பத்தி ஆவதால் இப்பூச்சிகள் பருத்தி செடிக்குப் பரவுவதை தடுக்க முடியும்.

** பருத்தியுடன் சூரியகாந்தியை 2.2 என்ற விகிதத்தில் பயிரிடுவதன் மூலம் பருத்தியை தாக்கும் பச்சைத் தத்துப்பூச்சியின் சேதம் குறைகிறது. பருத்தி அருகே பருத்தி குடும்பத்தை சேர்ந்த வெண்டை பயிர் செய்வதை தவிர்த்தல் நல்லது.

** பருத்தியில் பச்சைப் பயிர், உளுந்து, சோயாமொச்சை, ஆமணக்கு போன்ற பயிர்களை ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம் பருத்தியை தாக்கும் பூச்சிகளின் பெருக்கத்தை குறைத்து சேதத்தைத் தவிர்க்கலாம்.

** சோளத்துடன் அவரையை 4:1 என்ற விகிதத்தில் விதைத்து சோளத்தண்டு புழுவின் சேதத்தையும், நிலக்கடலையுடன் கம்புபயிரை 6:1 என்ற விகிதத்தில் விதைப்பதன் மூலம் சுருள் பூச்சியின் சேதத்தையும் குறைக்கலாம்.

** கரும்பில் தக்கை பூண்டு ஊடுபயிராகப் பயிரிடுவதன் மூலம் கரும்பு தண்டு துளைப்பானைக் கட்டுபடுத்தலாம்.

** மக்காச் சோளத்தில் ஊடுபயிராக ஆமணக்கு பயிரிடுவதன் மூலம் புரொடினியா புழுக்களைக் கட்டுபடுத்த முடியும். மக்காச்சோளத்தில் ஊடுபயிராக சோளம் பயிரிடுவதன் மூலம் குருத்து ஈ மற்றும் தண்டு துளைப்பானின் எண்ணிக்கையைக் கட்டுபடுத்தலாம்.

** புகையிலைப் பயிரில் ஊடுபயிராக ஆமணக்கு பயிரிடுவதன் மூலம் புகையிலை வெட்டு புழுக்களின் சேதம் கட்டுப்படுத்தப்படுகின்றன. பயிரில் பூச்சி நோய் விரட்டித் தாக்கும் வேம்பு, சீதா, நக்ஸ்வாமிகா போன்ற மரங்களை வரப்பில் நடலாம். செவ்வந்திப் பூ, கடுகு, ஆமணக்கு ஆகியனவற்றை பயிர்களைச் சுற்றிலும் வளர்த்துப் பூச்சிகளை விரட்டலாம்.

** கரையான்களை கட்டுபடுத்திட வெட்டிவேர், திருகுக்கள்ளி, எருக்கு, காட்டாமணக்கு ஆகிய செடிகளை வயலிலேயே ஆங்காங்கே வளர விடலாம்.

** வெங்காயத்தைத் தாக்கும் வெட்டுப்புழுக்களை கட்டுபடுத்த வரப்பு ஓரங்களில் ஆமணக்கைக் கவர்ச்சிப் பயிராகப் பயிரிட்டு அதில் காணப்படும் முட்டைக் குவியல்களையும் இளம் புழுக்களையும் சேகரித்து அழிக்கலாம்.

** காய்கறிப் பயிர்களான முட்டைகோஸ், காலிஃப்ளவர் ஆகியவற்றுடன் கடுகு பயிரிடும் போது கடுகுச் செடி கவர்ச்சிப் பயிராக செயல்பட்டு வைர முதுகு அந்துப் பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுபடுத்துகிறது.

** முட்டைக்கோசுடன் தக்காளி ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம் வைர முதுகு அந்துபூச்சி மற்றும் இலைப்புழுவைக் கட்டுபடுத்தலாம். கலப்பு பயிர் மற்றும் ஊடுபயிர்களை இருபது முதல் முப்பது நாட்களுக்கு முன்னரே பயிரிட வேண்டும்

Follow Us:
Download App:
  • android
  • ios