உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மேற்கு நாடுகள் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்தன.
இதற்கிடையே, ரஷ்யா நட்பற்ற நாடுகளின் பட்டியலை அறிவித்தது. இந்தப் பட்டியலில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், பிரிட்டன், ஜப்பான், கனடா, நார்வே, சிங்கப்பூர், தென்கொரியா, சுவிட்சர்லாந்து மற்றும் உக்ரைன் ஆகியவை அடங்கும். ரஷிய எரிவாயு மீதான தடைகள் அறிவிக்கப்பட்ட போதிலும், பல ஐரோப்பிய நாடுகள் மாஸ்கோவிலிருந்து உக்ரைன் வழியாக எண்ணெய் இறக்குமதி செய்து வருகின்றன.
இந்நிலையில், எரிவாயு விற்பனைக்கு ரூபிள் மட்டுமே ஏற்கப்படும் என்ற அதிபர் புதினின் அறிவிப்பு, ஐரோப்பாவை கடுமையாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நட்பற்ற நாடுகளுக்கு எங்கள் எரிவாயு விநியோகத்திற்கான கட்டணத்தை ரஷ்ய ரூபிள்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளைச் செயல்படுத்த நான் முடிவு செய்துள்ளேன். இந்த மாற்றங்களை ஒரு வாரத்திற்குள் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்தார்.
அரசாங்கமும் மத்திய வங்கியும் இந்த நடவடிக்கைகளை ரஷ்ய நாணயத்திற்கு எவ்வாறு நகர்த்துவது என்பது குறித்த ஒரு தீர்வைக் கொண்டு வருவதற்கு ஒரு வாரம் அவகாசம் இருப்பதாகவும், எரிவாயு ஒப்பந்தங்களில் தொடர்புடைய மாற்றங்களைச் செய்ய உத்தரவிடப்படும் என கூறியுள்ளார்.
ஜி 7 நாடுகள் கூட்டம் :
பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘ உக்ரைன் போரில் ரஷியாவுக்கு உதவினால் சீனா கடும் பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும்.
ரஷியாவிற்கு சீனா உதவி வழங்கும் சாத்தியம் குறித்து, கடந்த வாரம் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் மிகவும் நேரடியான உரையாடல் நடத்தினேன். ரஷியாவுடன் இருப்பதைவிட அதன் பொருளாதார எதிர்காலம் மேற்கத்திய நாடுகளுடன் மிக நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது என்பதை சீனா புரிந்து கொண்டுள்ளதாக நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.