போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்கள் 1 லட்சம் பேரை வரவேற்கும் திட்டங்களை அமெரிக்கா அறிவித்துள்ளதோடு, ரூ.7,000 கோடிக்கும் அதிகமாக நிதியுதவி வழங்கவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்கள் 1 லட்சம் பேரை வரவேற்கும் திட்டங்களை அமெரிக்கா அறிவித்துள்ளதோடு, ரூ.7,000 கோடிக்கும் அதிகமாக நிதியுதவி வழங்கவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி முதல் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ் ஆகிய பகுதிகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இன்று வரை ரஷ்யா தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலில் பல பகுதிகள் உருகுலைந்தன. மேலும் இரு நாடுகளை சேர்ந்த பலரும் இந்த போரில் உயிரிழந்தனர். இருந்த போதிலும் போர் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் மீது ரஷிய படைகள் மேற்கொண்டுள்ள தாக்குதல் இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது.
போரை நிறுத்தும்படி அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் வேண்டுகோள் விடுத்தன. அதை தொடர்ந்து ரஷ்யாவை வலியுறுத்தியும் வருகின்றன. இருந்த போதிலும் போரை ரஷ்யா கைவிடவில்லை. இதனால், ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்து உள்ளன. உக்ரைன் மீது போர் தொடுக்கவில்லை என்றும் நாங்கள் மேற்கொள்வது, ராணுவ நடவடிக்கை என்றும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைனின் நாசிச நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருகிறோம் என்றும் ரஷ்யா தெரிவித்தது. உக்ரைன் ரஷ்யா போரால், சுமார் 1 கோடி மக்கள் புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரஷ்ய படையெடுப்பினால், உக்ரைனை சேர்ந்த சுமார் 1 லட்சம் பேரை சட்டரீதியில் வரவேற்கும் திட்டங்களை அமெரிக்கா அறிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா போரினால் பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்கு மனிதநேய அடிப்படையில், புதிய நிதி ஒதுக்கீடு முறையில் ரூ.7,000 கோடிக்கும் கூடுதலான தொகையை வருகிற மாதங்களில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகி வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த நிதி உணவு, இடம், தூய்மையான குடிநீர், மருந்து வினியோகம் மற்றும் பிற வடிவங்களிலான உதவிகளை வழங்கும் என்றும் உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு ஜனநாயக மற்றும் மனித உரிமைகளின் அடிப்படையில் கூடுதலாக ரூ.2,240 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்றும் அமெரிக்கா தனது செய்திக்குறிப்பில் அறிவித்துள்ளது.