இந்தியாவை துண்டு துண்டாக உடைப்போம்.. காலிஸ்தான் வெல்லும்.. பாகிஸ்தானை சேர்ந்த ஷாஹீர் சியால்வி திமிர் பேச்சு.

By Ezhilarasan BabuFirst Published Feb 6, 2021, 1:36 PM IST
Highlights

காலிஸ்தான் போராட்டத்திற்காக இதுவரை பாகிஸ்தான் 22 கோடியை  நிதியாக வழங்கியுள்ளது, கல்சா காலிஸ்தானியர்களுக்கு, காஷ்மீர் பாகிஸ்தானுக்கு, அதேபோல் இந்தியாவிலுள்ள அஸ்ஸாம் மற்றும் ஹைதராபாத்தையும் விரைவில் விடுவித்து நாங்கள் கைப்பற்றுவோம். 

விரைவில் இந்தியாவை துண்டு துண்டாக உடைப்போம் என பாகிஸ்தானின் இளைஞர் மாணவர் அமைப்பின் தலைவர் ஷாஹீர் சியால்வி பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் காலிஸ்தானியர்களுக்கும்,  காஷ்மீர் பாகிஸ்தானுக்கும் சொந்தமானது எனவும், இந்தியாவிலுள்ள ஹைதராபாத், அசாம் போன்ற மாநிலங்களையும் இந்தியாவின் பிடியிலிருந்து விடுவித்து, விரைவில் அதை கைப்பற்றுவோம் என அவர் கூறியிருப்பது நாட்டு மக்களை கொந்தளிப்படைய செய்துள்ளது.

 நேற்று வெள்ளிக்கிழமை பாகிஸ்தானில் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் இருக்கும் கோட்லி என்னுமிடத்தில் காஷ்மீர் ஒற்றுமை நாள் கூட்டம் நடைபெற்றது. 1991ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் இந்த கூட்டத்தில் காஷ்மீரை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அதில் கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் போது நீங்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாக்களித்தால், பாகிஸ்தானோடு இணைந்து கொள்ளலாம் அல்லது நீங்கள் விரும்பினால் தனியாக சுதந்திர நாடாக இருக்கும் உரிமையை பாகிஸ்தான் உங்களுக்கு வழங்கும் என கூறியுள்ளார். 

இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, பாகிஸ்தான் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிக செல்வாக்கு மிக்க தலைவராக கருதப்படும் இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் தலைவர்ஷாஹீர் சியால்வி இந்தியாவை எச்சரிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இவர் சர்வதேச அளவில் உள்ள இளைஞர் மன்றங்களை இணைத்து பாலஸ்தீனம் மற்றும் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார். இவர் எப்போதும் இந்தியாவை எச்சரிக்கும்  வகையில் பேசும் நபர் ஆவர், இந்நிலையில் நேற்று ஒற்றுமை நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், காலிஸ்தான் தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக வருகிறது. அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: 

இந்திய பிரதமர் மோடிக்கு நான் ஒன்றை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன், பஞ்சாப் காலிஸ்தான் உங்களுக்கு சொந்தமானது, நீங்கள் என்ன நினைத்தாலும் அந்த போராட்டத்தை ஒடுக்க முடியாது, காலிஸ்தான் போராட்டத்திற்காக இதுவரை பாகிஸ்தான் 22 கோடியை  நிதியாக வழங்கியுள்ளது, கல்சா காலிஸ்தானியர்களுக்கு, காஷ்மீர் பாகிஸ்தானுக்கு, அதேபோல் இந்தியாவிலுள்ள அஸ்ஸாம் மற்றும் ஹைதராபாத்தையும் விரைவில் விடுவித்து நாங்கள் கைப்பற்றுவோம். மோடிக்கு நான் எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன், இந்தியாவை நாங்கள் துண்டு துண்டாக உடைப்போம் என அவர் கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு நாட்டு மக்களை கொந்தளிப்படைய வைத்துள்ளது. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் ஏற்கனவே காலிஸ்தான் பிரிவினைவாத சக்திகள் ஊடுருவி இருப்பதாக டெல்லி காவல்துறை எச்சரித்திருந்தது. மேலும், பாகிஸ்தான் ஆதரவுடன் அவர்கள் செயல்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது, இந்நிலையில் கனடாவில் செயல்பட்டுவரும் பொயட்டிக் ஜஸ்டிஸ் பவுண்டேஷன் இயக்கத்தின் நிறுவனர் மோ தாலிவால் என்பவர் அண்மையில் இந்தியாவுக்கு எதிராக பேசிய வீடியோ வைரலாகியுள்ளது. 

அதாவது குடியரசு தினத்தன்று இந்திய தூதரகத்துக்கு வெளியே விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக சில சீக்கிய அமைப்புகள் உள்ளிட்ட இயக்கங்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தின, அதற்கு தலைமை வகித்து மோ தாலிவால் பேசியிருந்தார். நாளை நடக்க உள்ள பேரணி தான் நமது  யுத்தத்தின் ஆரம்பம் என அவர் கூறியிருந்தார். அதே நேரத்தில் விவசாயிகள் போராட்டத்தை வைத்து காலிஸ்தான் இயக்கத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க பெரிய அளவில் சதி நடந்து வருவதாகவும்  இந்திய உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன, இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த இளைஞர் மாணவர் அமைப்பின் தலைவர், பஞ்சாப் காலிஸ்தானுக்கு என்றும், காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது எனவும், இந்தியாவை துண்டு துண்டாக உடைப்போம் எனவும் எச்சரித்து பேசியிருப்பது உளவுத்துறையின் எச்சரிக்கையை மெய்ப்பிப்பதாக உள்ளது.  

 

click me!