
இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தித்திறன் இன்று உலகின் மிகச்சிறந்த சொத்து என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோணியோ குடரெஸ் தெரிவித்துள்ளார். உலக அளவில் தடுப்பூசி விநியோகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகித்து வருகிறது எனவும், தடுப்பூசி பிரச்சாரத்திற்கு இந்தியா தொடர்ந்து பங்களிக்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்தது. இந்த வைரஸில் இருந்து இன்னும் முழுவதுமாக மீளமுடியாமல் மனித சமூகம் திண்டாடி வருகிறது. சர்வதேச நாடுகளின் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் அயராத உழைப்பின் காரணமாக கொரோனா வைரஸ் தடுப்பூசி மனித சமூகத்திற்கு வரப்பிரசாதமாக வந்துள்ளது. கொரோனா வைரசை எப்படியும் விரட்டி விடலாம் என்ற புது நம்பிக்கை மக்கள் மத்தியில் உதித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு நிகராக இந்தியாவும் தனது பங்குக்கு கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் என்ற இரண்டு தடுப்பூசிகளை மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்தத் தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிராக சிறப்புடன் செயலாற்றுவதுடன், மலிவான விலையில் பெற முடியும் என்பது இத் தடுப்பூசியின் சிறப்பம்சமாக உள்ளது.
எனவே உலக அளவில் ஏழை எளிய நடுத்தர நாடுகள் இந்தியாவில் தடுப்பூசியை எதிர்நோக்கி காத்திருக்கின்றன. ஜனவரி 20 முதல் 55 இலட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் அண்டை நாடுகளுக்கு விநியோகிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதில் 1.5 லட்சம் தடுப்பூசிகள் பூட்டானுக்கும், 1 லட்சம் மாலத்தீவுக்கும், மொரிசியஸ் மற்றும் பஹ்ரைனுக்கு 10 லட்சமும், நேபாளத்திற்கு 20 லட்சமும், பங்களாதேஷ் மற்றும் மியான்மருக்கு 15 லட்சமும், சீஷெல்ஸுக்கு 50 ஆயிரமும், இலங்கைக்கு மொத்தம் 5 லட்சம் தடுப்பூசிகளும் நட்பு அடிப்படையில் வழங்கப்படும் என மோடி அறிவித்துள்ளார். ஓமனுக்கு கூடுதல் அளவு பரிசு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நிகரகுவாவுக்கு 2 லட்சம் தடுப்பூசிகளும், பசிபிக் தீவு நாடுகளுக்கு 2 லட்சம் டோஸ் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, கனடா, மங்கோலியா மற்றும் பிற நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி வணிகரீதியாக ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.
பிரேசில், மொராக்கோ மற்றும் பங்களாதேஷுக்கு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆப்பிரிக்காவுக்கு மொத்தம் 10 மில்லியன் தடுப்பூசிகளும், ஐக்கிய நாடுகளின் சுகாதார ஊழியர்களுக்கு 10 லட்சம் தடுப்பூசிகளும் வழங்க திட்டமிட்டுள்ளதாக இந்தியா கூறியுள்ளது. இந்நிலையில் சர்வதேச அளவில் தடுப்பூசி வினியோகத்தில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்நிலையில் இதை வரவேற்று பேசியுள்ள, ஐநா பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்ரோஸ், இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தித்திறன் இன்று உலகில் உள்ள மிகச்சிறந்த சொத்து என்று நான் நினைக்கிறேன், அது முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை உலகம் புரிந்து கொண்டிருப்பதாக நான் நம்புகிறேன், மக்களுக்கான அணுகலை ஜனநாயக மாயமாக்க வேண்டியதன் அவசியத்தை இந்தியா உணர்த்தியுள்ளது. இன்று உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் ஏற்கனவே இருக்கும் தடுப்பூசிகளை தயாரிக்க முடியும் என்பதற்கு உரிமங்கள் கிடைக்க வேண்டும். தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க செய்வதே மிக முக்கியமான கூறுகளில் ஒன்று என நான் வலியுறுத்துவேன். இதை நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி திறன் குறித்து நான் நன்கு அறிகிறேன். இந்தியாவில் உற்பத்தி மிக உயர்ந்த நிலையில் உள்ளது, இதுதொடர்பாக நாங்கள் இந்திய நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டுள்ளோம். உலகலாவிய தடுப்பூசி போடுவதை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்க தேவையான அனைத்து கருவிகளும் இந்தியாவில் இருக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இது இந்தியாவில் மட்டுமே சாத்தியமாகும் என அவர் கூறியுள்ளார்.