அழிந்து வரும் டோக் மக்காக் வகை குரங்குகளை இலங்கையில் இருந்து இறக்குமதி செய்ய சீனா கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையின் பல பகுதிகளில் டோக் மக்காக் என்ற குரங்கு வகைகள் அதிகம் காணப்படுகின்றன.. சுமார் 2 முதல் 3 மில்லியன் குரங்குகள் இலங்கையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த வகை குரங்குகள், விவசாய நிலங்களில் பயிர்களை அழிப்பதாகவும், சில நேரங்களில் இந்த குரங்குகள் மனிதர்களையும் தாக்குவதாகவும் கூறப்படுகிறது.. எனவே இந்த குரங்குகளை விவசாயிகள் கொல்வதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கி உள்ளது.. இந்த சூழலில் அழிந்து வரும் குரங்குகளை தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யுமாறு சீனா இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.. இலங்கையின் விவசாய அமைச்சகத்திற்கு, சீன உயிரியல் பூங்கா நிறுவனம் இதுகுறித்து கடிதம் அனுப்பி உள்ளது..
இதனையடுத்து இலங்கை அரசு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.. டோக் குரங்குகளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாக இலங்கை அரசாங்கம் எந்த கலந்துரையாடலையும் நடத்தவில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பாக பல்வேறு தரப்பினரால் வழங்கப்பட்ட பல முன்மொழிவுகளுடன் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குணவர்தன தெரிவித்துள்ளார்..
சீனாவில் தனியார் நிறுவனம் ஒன்றினால் நடத்தப்படும் 1000 உயிரியல் பூங்காக்களுக்கு சுமார் 1 லட்சம் குரங்குகளை ஏற்றுமதி செய்ய விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர முன்மொழிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.. மேலும், சீனாவிற்கு குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழு குரங்குகள் ஏற்றுமதி தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாகவும் குணவரத்தன தெரிவித்துள்ளார்..
இதனிடையே இலங்கை விவசாய அமைச்சகத்தின் உயர் அதிகாரி குணதாச சமரசிங்க இதுகுறித்து பேசிய போது “ தனியாருக்குச் சொந்தமான சீன உயிரியல் பூங்கா நிறுவனம் ஒன்று எங்கள் அமைச்சகத்திடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. நாங்கள் 100,000 குரங்குகளையும் ஒரே நேரத்தில் ஏற்றுமதி செய்யமாட்டோம்.. ஆனால் நாட்டின் பல பகுதிகளில் குரங்குகளால் பயிர் சேதம் ஏற்பட்டதால் கோரிக்கையை பரிசீலித்தோம். அவை பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலிருந்து எடுக்கப்படாது. விவசாய பகுதிகளை அழித்து வரும் குரங்குகளின் மீது மட்டுமே கவனம் செலுத்தப்படும்” என்று தெரிவித்தார்..
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இலங்கையில் வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதம் குறித்த முதற்கட்ட அறிக்கை, தென்னை பயிர்களை சேதப்படுத்துவதற்கு டோக் மக்காக்கள் மற்றும் ராட்சத அணில்கள் காரணம் என்றும், யானைகள், காட்டுப்பன்றிகள் மற்றும் மயில்கள் நெல் வயல்களுக்கு சேதம் விளைவிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த பயிர் சேதத்தினால் 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சுமார் 30,215 மில்லியன் இலங்கை ரூபாய் ($87.5 மில்லியன்) நிதி இழப்பு ஏற்பட்டதாக அறிக்கை மதிப்பிட்டுள்ளது. எனவே குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவதன் மூலம் இலங்கைக்கு பணம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது..
இதனிடையே குரங்குகள் உயிரியல் பூங்காக்களுக்குப் பதிலாக ஆய்வகங்களுக்குச் செல்லலாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பாதுகாவலர்களை எச்சரித்துள்ளனர். சீனாவில் சுமார் 18 உயிரியல் பூங்காக்கள் மட்டுமே உள்ளன, அவை ஒவ்வொன்றிலும் சுமார் 5,000 குரங்குகள் இருக்கும் என்று அந்த அமைப்புகள் கூறுகின்றன. மேலும் "மக்காக் வகை குரங்குகள், மனிதர்களை போன்ற குணங்களுடன் பிரபலமாக உள்ளன, குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மருத்துவ பரிசோதனை மையங்கள் உள்ளன. எனவே இந்த குரங்குகளை ஆய்வகங்களில் வைத்து பரிசோதனை செய்ய திட்டமிட்டிருக்கலாம்..” என்று தெரிவித்துள்ளனர். எனவே சீனாவின் முன்மொழிவை நிராகரிக்க வேண்டும் மற்றும் டோக் மக்காக் வாழ்விடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட டோக் மக்காக் குரங்கு, இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் அழிந்து வரும் இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : நாளை விண்ணில் பாய்கிறது PSLV-C55 ராக்கெட்.. திருப்பதியில் தரிசனம் செய்த இஸ்ரோ விஞ்ஞானிகள்...