பஞ்சாயத்துக்கு நாங்க கட்டுப்பட முடியாது.. கடுப்பேற்றிய ரஷியா.. பாவம் ஐநா என்ன செய்யுமோ ?

By Raghupati R  |  First Published Mar 18, 2022, 12:39 PM IST

உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன. பெரிய நகரங்கள் எதையும் இதுவரை ரஷியா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவில்லை. 


உக்ரைன் Vs ரஷியா :

கீவ் நகரை ரஷிய படைகள் சுற்றி வளைத்துள்ள போதிலும் நகருக்குள் இன்னும் நுழையவில்லை. ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்கள் கடும் சவால் அளித்து வருகிறார்கள். கிழக்கு உக்ரைனில் கார்கிவ் நகருக்கு அருகே மெரேபாவில் உள்ள ஒரு பள்ளிக்கூடம், சமுதாய கூடம் மீது ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தியது. அந்த கட்டிடங்கள் மீது பீரங்கி தாக்குதல் தொடுக்கப்பட்டதில் தரைமட்டமானது.

Tap to resize

Latest Videos

பள்ளி, சமுதாய கூடத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்கி இருந்தனர். தாக்குதல் காரணமாக அவர்களது கதி என்ன ஆனது என்பது குறித்து தகவல் தெளிவாக வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் மெரேபாவில் பள்ளி, சமுதாயக்கூடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 21 பொதுமக்கள் பலியாகி உள்ளனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பதுங்கு குழியில் மக்கள் :

25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன. கார்கிவ் நகரில் உள்ள ஐரோப்பியாவின் மிகப்பெரிய மார்க்கெட்டான பாரபஷோலோ சந்தையில் குண்டுகள் வீசப்பட்டன. அதில் அந்த மார்க்கெட் தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.

இதே போல் கார்கிவ் நகரின் மற்ற பகுதிகளிலும் தாக்குதல் நீடித்து வருகிறது. தலைநகர் கிவ்வில் ரஷிய படைகள் தங்களது தாக்குதலை நிறுத்தாமல் தொடர்ந்து வருகிறது. தலைநகர் கீவ்வை பிடிப்பதில் ரஷிய படைகள் தீவிரமாக உள்ளதால் அங்கு ரஷிய படைகள் தாக்குதலை அதிகப்படுத்தலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதே போல் மற்ற நகரங்களிலும் தாக்குதல் தொடர்ந்தபடி இருப்பதால் மக்கள் பீதியுடன் உள்ளனர். பதுங்கு குழிகள், கட்டிடங்களின் அடித்தளங்கள் மற்றும் முகாம்களில் தவிப்புக்குள்ளாகி உள்ளனர். பெரும்பாலான நகரங்களில் உணவு மற்றும் தண்ணீருக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது.

சர்வதேச நீதிமன்றம் உத்தரவு :

உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ரஷியாவுக்கு உத்தரவிடக் கோரியும், ரஷிய படைகளை வெளியேற்றக் கோரியும் ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.  உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு ரஷியாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளும் நிலைமையை மேலும் மோசமாக்கும் அல்லது நீட்டிக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவுகள் 13-2 என்ற வாக்குகள் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி பெரும்பான்மைக்கு ஆதரவாக, அதாவது போருக்கு எதிராக வாக்களித்துள்ளார்.

இந்த தீர்ப்பை ஏற்க மறுத்துள்ளது ரஷியா. உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த முடியாது என ரஷியா கூறி உள்ளது. சர்வதேச நீதிமன்றத்தின் முடிவை ரஷியா கணக்கில் எடுத்துக்கொள்ளாது என்று ரஷிய அதிபர்  மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறினார். இந்த வழக்கில் இரு தரப்பில் இருந்தும் ஒப்புதல் பெற முடியாது. 

ரஷியா ஏற்க மறுத்ததால் சர்வதேச நீதிமன்ற தீர்ப்பு பயனற்றதாகவே உள்ளது.  இந்த விஷயத்தில் ஐ.நா. சபை தலையிட்டு நிரந்தர தீர்வை ஏற்படுத்த முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கும் நிலையில், அடுத்து என்னவாகும் என்பதே அனைவரிடமும் கேள்வியாக இருக்கிறது.

click me!