ஜப்பானில் 11 ஆண்டுகளுக்கு பின் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜப்பானில் 11 ஆண்டுகளுக்கு பின் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பானின் ஃபுகுஷிமா மாகாணத்தின் கடற்கரை அருகே சுமார் 7.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புகுஷிமா கடற்கரையில் 60 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், சில நிமிடங்களுக்கு முன்னதாக அதே பகுதியில் மற்றொரு வலுவான 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலடுக்கதால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில், புகுஷிமா பகுதியில் ஒருவர் மற்றும் அண்டை நாடான மியாகியில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், சுமார் 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. மேலும் அணுமின் நிலையங்களில் அசாதாரணங்கள் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், டோக்கியோவில் உணரப்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதில் அச்சம் கொண்ட மக்கள் ஏராளமானோர் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்திற்குப் பிறகு தலைநகரிலும் பிற இடங்களிலும் சுமார் இரண்டு மில்லியன் வீடுகள் மின்சாரத்தை இழந்தன. ஆனால் அது படிப்படியாக சரி செய்யப்பட்டது. ஆனால், மியாகி மற்றும் புகுஷிமா பகுதிகளில் உள்ள சுமார் 35,600 வீடுகளில் இன்று காலை வரை மின்சாரம் இல்லை என்று மின்சார நிறுவனம் TEPCO தெரிவித்துள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜப்பானிய அதிகாரிகளால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
வடகிழக்கு ஜப்பானின் சில பகுதிகளில் 30 சென்டிமீட்டர் அதிகமாக நீர்மட்டம் பதிவானதை அடுத்து, வியாழன் அதிகாலையில் வடகிழக்கு ஜப்பானின் சில பகுதிகளில் ஒரு மீட்டர் வரை அலைகள் வருவதற்கான சுனாமி எச்சரிக்கை நீக்கப்பட்டது. இதற்கு முன்னதாக கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பானின் இதே ஃபுகுஷிமா மாகாணத்தில் 9.0 ரிக்டர் அளவிளான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் அணுமின் நிலையங்கள் உள்ளிட்டவை பெரும் பாதிப்பை சந்தித்தன என்பது குறிப்பிடத்தக்கது. 11 ஆண்டுகளுக்கு பின் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 2 பேர் உயிரிழந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.