Queen Elizabeth II’s Burial Site: பிரிட்டன் ராணி எலிசபெத் துயில இருக்கும் வின்ட்சர் அரண்மனையின் ரகசியம்!!

By Dhanalakshmi G  |  First Published Sep 19, 2022, 1:24 PM IST

ஆயிரக்கணக்கான காவல்துறை, நூற்றுக்கணக்கான பிரிட்டின் ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் இன்று நடைபெறும் ராணிஎலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்கான இறுதி தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று நடைபெற இருக்கும் இந்த துக்க நிகழ்வு மிகப்பெரிய நிகழ்வாக சரித்திரத்தில் பார்க்கப்படும்.


கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி காலமான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் வைக்கப்பட்டு இருக்கும் இடத்தில் மக்கள் ஆழ்ந்த மௌனத்தில் 60 வினாடிகள் துக்கம் அனுஷ்டித்தனர். வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் ராணியின் இறுதிச் சடங்கிற்குப் பிறகு இன்று மாலை (திங்கள்கிழமை மாலை) (இங்கிலாந்து நேரம்) ராணியின் உடல் அடக்கம் செய்யப்படும் விண்ட்சர் கோட்டைக்கு வெளியே பாதுகாப்பிற்காக இரவு முழுவதும் சிலர் இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக நாற்காலிகளுடன் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது ராணியின் சவப் பெட்டி பாதுகாப்பதற்காக என்று கூறப்படுகிறது.

இந்த நூற்றாண்டில் உலகின் மிகப்பெரிய நிகழ்வாக ராணி எலிசபெத்தின் இறுதி ஊர்வலம் மாற இருக்கிறது.  இன்று நடக்கும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள உலகம் முழுவதிலுமிருந்து தலைவர்கள், விருந்தினர்கள் வந்துள்ளனர். ராணியின் சவப்பெட்டி அவரது கணவர் எடின்பர்க் டியூக்குடன் வின்ட்சர் கோட்டையின் ராயல் வால்ட்டில் புதைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் கடந்த 13ம் தேதி பிரிட்டன் சென்றடைந்தது. லண்டனில் ராணியின் உடலை மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த 4 நாட்களுக்கு மேலாக லட்சக்கணக்கான மக்கள் ராணி எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இன்று நடக்கும் ராணி எலிசபெத்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பிரிட்டன் வந்துள்ளனர். அதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல், ராஜ மரியாதையுடன் கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே, ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவும், இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவிக்கவும் நேற்றிரவு விமானம் மூலம் புறப்பட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு, நேற்று அதிகாலை லண்டன் சென்றடைந்தார். ராணிக்கு இறுதி மரியாதை செலுத்திய முர்மு மூன்றாம் மன்னர் சார்லஸ்சையும் சந்தித்துப் பேசினார். 

ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியை ஒளிபரப்ப சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்து முழுவதும் சுமார் 125 திரையரங்குகள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் திரைகளை அமைத்து நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படுகின்றன. கடந்த 1997ம் ஆண்டு இறந்த இளவரசி டயானாவின் இறுதிச் சடங்குகள், கடந்த 2012ம் ஆண்டு நடந்த லண்டன் ஒலிம்பிக்ஸ் மற்றும் அரச திருமணங்கள் உட்பட, சமீபத்திய இங்கிலாந்து வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகள் பட்டியலில் ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கும் சேரவுள்ளது. 

ராயல் வால்ட் என்பது விண்ட்சர் கோட்டையின் (அரண்மனை) மைதானத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தின் பலிபீடமாகும். இது தரையில் இருந்து சுமார் 16 அடி (ஐந்து மீட்டர்) கீழே உள்ளது. இங்கு பிரிட்டன் அரச குடும்பத்துடன் தொடர்புடையவர்களின் இறந்த சவப்பெட்டிகள் அடக்கம் செய்யப்படுகிறது. இது தேவாலயம் என்றாலும், அதிகளவில் மன்னர் பரம்பையில் இறந்தவர்களின் உடல்கள் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. விண்ட்சர் கோட்டைக்குள் இந்த தேவாலயம் இருக்கிறது. விண்ட்சர் கோட்டை ஏறக்குறைய 1000 ஆண்டுகளாக மன்னராட்சிக்கு சொந்தமானது. இது இரண்டாம் எலிசபெத் இறக்கும் வரை அவரது முக்கிய இல்லமாகவே இருந்தது.

பெட்டகமே ஒரு கல் அறை. 70 அடி (21 மீ) நீளமும் 28 அடி (எட்டு மீட்டர்) அகலமும் கொண்டது. நுழைவாயில் இரும்பு கேட் மூலம் மூடப்பட்டுள்ளது. அறைக்குள் 44 உடல்களை வைக்க போதுமான இடம் உள்ளது. 32 சவப்பெட்டிகள் கல் சுவர்களில் கட்டப்பட்ட அலமாரிகளில் அமைக்கப்பட்டுள்ளன, மீதமுள்ள 12 உடல்கள் அறையின் மையத்தில் உள்ளன. இறுதிச் சடங்கின் போது செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் நிலத்தடி பிணவறையை அணுகுவதற்காக தரையின் ஒரு அடுக்கு அகற்றப்பட்டுள்ளது. சவப்பெட்டியானது மின்சார லிப்ட் மூலம் தரையில் உள்ள துளை வழியாக கீழே இறக்கப்படுகிறது. 

செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் 15 ஆம் நூற்றாண்டிலிருந்து அரச குடும்பத்தில் இறந்தவர்களின் உடல்கள்  அடக்கம் செய்யப்பட்டு வருகிறது. அடக்கம் செய்யப்பட்ட அரச குடும்பங்களில் ஹென்றி VIII, சார்லஸ் I மற்றும் எட்வர்ட் VII ஆகியோரும் அடங்குவர்.

ராயல் வால்ட்டில் தற்போது 25 அரச குடும்ப உறுப்பினர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் பிரிட்டன் மன்னர்கள், இவர்களது மனைவிகள் மற்றும் குழந்தைகள் அடங்குவர்.

மூன்றாம் ஜார்ஜ் மன்னரின் மகள் இளவரசி அமெலியா, 1810-ல் தனது 27 வயதில் இறந்தார்.

ஜார்ஜ் III அவர்களின் சகோதரி இளவரசி அகஸ்டா 181 -ல்  அடக்கம் செய்யப்பட்டார்.

1817 ஆம் ஆண்டு ஜார்ஜ் IV மன்னரின் மகள் இளவரசி சார்லோட் மற்றும் அவரது இறந்த மகன் இங்கு வைக்கப்பட்டனர்.

ஜார்ஜ் III ஆம் மன்னரின் மனைவி ராணி சார்லோட் 1818-ல் அடக்கம் செய்யப்பட்டார்.

ஜார்ஜ் III ஆம் மன்னரின் மகன் இளவரசர் எர்னஸ்ட் அகஸ்டஸின் இறந்த மகள் 1818-இல் அடக்கம் செய்யப்பட்டார்.

1820 ஆம் ஆண்டில், ஜார்ஜ் III மற்றும் இளவரசர் எட்வர்ட், கென்ட் டியூக் ஆகியோர் இங்கு அடக்கம் செய்யப்பட்டனர்.

ஜார்ஜ் III ஆம் மன்னரின் மகன்கள் - இளவரசர் ஆல்ஃபிரட் (இவர் 1782-ல் இறந்தார்) மற்றும் இளவரசர் ஆக்டேவியஸ் (இவர் 1783-ல் இறந்தார்) - 1820-ல் தங்கள் தந்தையுடன் ஓய்வெடுக்க இங்கு கொண்டு வரப்பட்டனர்.

வில்லியம் IV ஆம் மன்னரின் மகள் இளவரசி எலிசபெத் 1821- ல் இங்கு வைக்கப்பட்டார்.

இளவரசர் ஃபிரடெரிக், டியூக் ஆஃப் யார்க் மற்றும் ஜார்ஜ் IIIஆம் மன்னரின்  மகன் 1827-ல் இங்கு அடக்கம் செய்யப்பட்டனர்.

ஜார்ஜ் IV (1830) மற்றும் வில்லியம் IV (1837) ஆகியோர் இறந்த பிறகு ராயல் வால்ட்டில் வைக்கப்பட்டனர்.

இளவரசி சோபியா 1840-ல் இங்கு வைக்கப்பட்டார்.

ராணி அடிலெய்டு, வில்லியம் IVஆம் மன்னரின் மனைவி, 1849-ல் இங்கு கொண்டு வரப்பட்டார்.

விக்டோரியா மகாராணியின் பேரன் ஷெல்ஸ்விக் (ஹோல்ஸ்டீன் இளவரசர்) ஃபிரெட்ரிக் 1876-ல் இங்கு வைக்கப்பட்டார்.

ஜார்ஜ் IIIஆம் மன்னரின் பேரன் (ஹனோவரின் நாடு கடத்தப்பட்ட மன்னர்) ஜார்ஜ் V 1878-ல் அவர் இறந்த பிறகு இங்கு வைக்கப்பட்டார்.

ஜார்ஜ் V ஆம் மன்னரின் பேத்தி விக்டோரியா வான் பவல் ராமிங்கன் 1881-ல் இங்கு அடக்கம் செய்யப்பட்டார்.

ஹனோவரின் இளவரசி ஃப்ரெடெரிகா 1927-ல் வைக்கப்பட்டார்.

இளவரசி மேரி அடிலெய்ட், டச்சஸ் ஆஃப் டெக் மற்றும் ஜார்ஜ் IIIஆம் மன்னரின் பேத்தி 1897-ல் இங்கு அடக்கம் செய்யப்பட்டார். 

இளவரசர் பிரான்சிஸ் (டெக் டியூக்) 1900-ல் இங்கு வைக்கப்பட்டார்.

இளவரசர் அடோல்ஃபஸ் (கேம்பிரிட்ஜ் டியூக்) மற்றும் அவரது மனைவி இளவரசி அகஸ்டா (கேம்பிரிட்ஜ் டச்சஸ்) 1930 ஆம் ஆண்டில் இங்கு அடக்கம் செய்யப்பட்டனர். 

இளவரசர் பிலிப் (ராணியின் கணவர்) ஏப்ரல் 17ல், 2021 ஆம் ஆண்டு இங்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டார்.

உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு ராணி எலிசபெத்தின் இறுதி ஊர்வலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த ஊர்வலத்தில் சுமார் 6,000 முப்படைகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். 123 ஆண்டுகள் பழமையான பீரங்கி வண்டியை இழுக்கும் பணியில் 98 ராயல் கப்பற்படை மாலுமிகள் ஈடுபடுகின்றனர். இவர்கள்தான் சவப்பெட்டியை வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு எடுத்துச் செல்கின்றனர். பைப் இசைக்கும் குழுவினர், கூர்க்காக்களின் படையணி, ஏராளமான ஸ்காட்லாந்து மற்றும் ஐரிஷ் படைப்பிரிவினர்,  ராயல் விமானப்படை மற்றும் 200 இசைக்கலைஞர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் இருந்து சவப்பெட்டியை விண்ட்சர் கோட்டைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருக்கும் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.  

click me!