சூடானில் இருந்து இந்தியர்களுடன் புறப்பட்ட முதல் விமானம் டெல்லி வந்தது.. போர் குறித்து இந்தியர்கள் சொன்ன தகவல்

By Ramya s  |  First Published Apr 27, 2023, 9:27 AM IST

போரினால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து இந்தியர்களுடன் புறப்பட்ட இந்திய விமானம் நேற்றிரவு டெல்லி வந்தடைந்தது.


சூடானில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்களுடன் புறப்பட்ட இந்திய விமானப்படையின் முதல் விமானம் நேற்றிரவு டெல்லி வந்தடைந்தது.. இந்த சிறப்பு விமானம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவிலிருந்து 360 இந்தியர்களுடன் டெல்லி வந்தடைந்தது. போரினால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை வெளியேற்ற மத்திய அரசு 'ஆபரேஷன் காவேரி' என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது. நாட்டின் போர்க்கப்பல் மற்றும் போர் விமானங்கள் மூலம் சூடானில் இருக்கும் இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஆபரேஷன் காவேரி என்ற திட்டத்தின் கீழ், சூடானில் இருந்து வெளியேற்றும் இந்தியர்களை சவுதி அரேபிய நகரமான ஜெட்டாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து அவர்கள் நாடு திரும்பினர். சவுதி அரேபிய நகரமான ஜெட்டாவில் போக்குவரத்து வசதியை இந்தியா அமைத்துள்ள நிலையில், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி முரளீதரன் வெளியேற்றும் பணியை மேற்பார்வையிட்டு வருகிறார்.

Latest Videos

undefined

இதையும் படிங்க : தமிழகத்தில் பாஜகவிற்கு எத்தனை சீட் கொடுப்பீங்க..? இப்பவே சொல்லுங்க..! இபிஎஸ்க்கு கெடு விதித்த அமித்ஷா

இதுவரை சூடானில் இருந்து குறைந்தபட்சம் 534 இந்தியர்களை இந்தியா வெளியேற்றியுள்ளது. சூடானில் தற்போது இராணுவத்திற்கும் துணை ராணுவப் படைக்கும் இடையேயான போர்நிறுத்தம் முடிவடைவதற்கு முன்பே இந்தியர்கள் அனைவரையும் மீட்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இந்திய விமானப்படையின் 2 போர் விமானங்கள் மூலம் நேற்று போர்ட் சூடானில் இருந்து 256 இந்தியர்கள் ஜித்தாவிற்கு கொண்டு வரப்பட்டன. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, சூடானில் இருந்து இதுவரை வெளியேற்றப்பட்ட மொத்த இந்தியர்களின் எண்ணிக்கை 534 ஆக உள்ளது.

முதல்கட்டமாக அழைத்து வரப்பட்ட இந்தியர்களில் 9 தமிழர்களும் டெல்லி வந்தனர். இதில் 5 பேர் சென்னை வந்த நிலையில், 4 பேர் நேரடியாக மதுரை சென்றனர். சூடானில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்களை அழைத்து வரும் செலவை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
 

இதனிடையே, சூடானில் இருந்து வெளியேறிய இந்தியர்கள் தங்களுக்கு நேர்ந்த துயரங்களை விவரித்தனர். சூடானில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்களில் தனது அனுபவம் குறித்து பேசிய போது, " சண்டை உக்கிரமாக இருந்தது. நாங்கள் உணவுக்காக போராடிக் கொண்டிருந்தோம்.  2-3 நாட்கள் மோதல்தொடர்ந்தது." என்று தெரிவித்தார்.

சூடானில் இருந்து வெளியேற்றப்பட்ட மற்றொரு இந்தியர் பேசிய போது " எங்கள் நிறுவனத்திற்கு அருகில் துணை ராணுவ படைகளின் கூடாரம் இருந்தது. அதிகாலை சுமார் 9 மணியளவில், படைகள் எங்கள் நிறுவனத்திற்குள் நுழைந்தன. நாங்கள் சூறையாடப்பட்டோம். அவர்கள் எங்களை 8 மணி நேரம் பிணைக் கைதிகளாக வைத்திருந்தனர். அவர்கள் எங்கள் மார்பில் துப்பாக்கிகளை வைத்து கொள்ளையடித்தனர். எங்கள் மொபைல்கள் திருடப்பட்டன," என்று தெரிவித்தார்.

ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளுக்கு இடையே நடக்கும் சண்டையால் ஆப்பிரிக்க நாடான சூடான் போர்க்களம் போல் காட்சி அளிக்கின்றது. சூடானின் இராணுவத் தளபதி அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹானுக்கு விசுவாசமான படைகளுக்கும் முகமது ஹம்தான் டாக்லோ தலைமையில் கீழ் செயல்படும் துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 15-ம் தேதி முதல் சண்டை நடந்து வருகிறது. இந்த மோதலில் இதுவரை சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பல நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை வெளியேற்றி வருவதால் அங்கு தற்காலிகமாக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடு..! இல்லைனா பதவியை ராஜினாமா செய்.! ஸ்டாலினுக்கு எதிராக சீறும் ஆர் பி. உதயகுமார்

click me!