சீனாவின் எண்ணமே தைவானை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதுதான். ஆனால், சாதிக்க முடியுமா என்பதுதான் தற்போதைய கேள்வியாக இருக்கிறது.
தைவானை நோக்கி போர் ஜெட் விமானங்கள், குண்டுகளை குறிவைத்து வீசும் சாதனங்கள் என சீனா அனுப்பி இருக்கிறது. இதற்கு முன்னதாக தைவான் தனது கடல் பரப்பில் ராணுவ பயிற்சிகளை நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்தது. ஆனால், முந்திக் கொண்டு சீனா தனது ராணுவ வாகனங்களை அனுப்பி இருப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
தொடர்ந்து கடந்த பல மாதங்களாக தைவானை நோக்கி சீனா போர் விமானங்களை, ட்ரோன்களை அனுப்பி வருகிறது. இதை கவனித்து வந்த தைவான் கடந்த சில மாதங்களாக ரஷ்யாவை, உக்ரைன் எவ்வாறு எதிர்கொள்கிறது என்பது குறித்த ஆய்வு செய்தது. எவ்வாறு ட்ரோன்களை சீனாவுக்கு எதிராக தந்திரமாக பயன்படுத்தலாம் என்பது குறித்து தைவான் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் போர் தொடங்கியவுடன் விழித்துக் கொண்ட தைவான் அதிபர் சை இங்க் வென் தனது உயர் அதிகாரிகளிடம் எவ்வாறு தன்னுடைய பலம் பொருந்திய, வலுவான எதிரியை உக்ரைன் எதிர்கொள்கிறது, வெற்றி பெறுகிறது என்று கேட்டுள்ளார். உடனடியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள் 77 பக்கத்திற்கு ஆய்வு அறிக்கையை அதிபர் சை இங்க்கிடம் சமர்ப்பித்தனர்.
சிங்கப்பூர் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் இந்தியா!
உக்ரைன் நாட்டிடம் விமானங்கள் குறைவாகத்தான் இருந்துள்ளன. சமாளிப்பது கடினம் என்றுதான் அந்த நாடே நினைத்துள்ளது. ஆனால், ட்ரோன் இருக்கும்போது என்ன கவலை என்று விழித்துக் கொண்ட உக்ரைன் போர் விமானங்களை எதிர்கொள்ள ட்ரோன்களை பயன்படுத்தியுள்ளது. உளவு, கண்காணிப்பு, இலக்கு ஆகியவற்றுக்கு ட்ரோன்களை உக்ரைன் பயன்படுத்தியுள்ளது.
இன்று டிரோன்கள் பெரிய அளவில் எதிரிகளின் படைகளை அச்சுறுத்துவதற்கு, கண்காணிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. ட்ரோன்கள் மூலம் குண்டுகள் வீசப்படுகிறது. இது பீரங்கி டாங்குகள், ஆயுதங்கள், ராணுவ வாகனங்கள், வீரர்களுக்கு பெரிய அளவில் அச்சுறுத்தலை கொடுக்கிறது என்று ராணுவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், பயங்கர தாக்குதல்களை மேற்கொள்வதற்கு முன்பு எந்தப் பகுதியில் எதிரிகளின் துருப்புகள் இருக்கின்றன. எவ்வாறு தாக்கினால் அதிக சேதங்களை ஏற்படுத்த முடியும் போன்றவற்றை அறிந்து கொள்வதற்கு இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இலக்கை நிர்ணயிக்க ட்ரோன்கள் மிகவும் கை கொடுக்கின்றன. மேலும், மனிதர்கள் சேதாரம் இல்லாமல் எப்படி எதிரிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது என்பதற்கு ட்ரோன்கள் மிகவும் பயன்படுவதாக வாஷிங்டனை இருப்பிடமாகக் கொண்ட சர்வதேச ஆய்வு மையம் ஒன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் அவமானப்படுத்தப்பட்ட Oppenheimer.. இந்தியாவில் நேரு செய்த செயல்.. என்ன நடந்தது?
ரஷ்யா, உக்ரைன் இருநாடுகளும் எலக்ட்ரானிக் ஜாமர், ட்ரோன்களை அழிக்கும் துப்பாக்கிகள், ஏவுகணைகள் ஆகியவற்றை வைத்துக் கொண்டுள்ளன. ஆனாலும், இந்த ரேடாரிலும் படாமல் இவர்கள் தங்களது துல்லியமான இலக்குகளை அடைவதற்கு ட்ரோன்களை பயன்படுத்துகின்றனர்.
ஒரே மாதத்தில் மட்டும் உக்ரைன் 10,000 ட்ரோன்களை இழந்து இருப்பதாக லண்டனை இருப்பிடமாகக் கொண்டு இருக்கும் ராயல் யுனைடெட் சர்வீஸ் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது. ட்ரோன்கள் விலை குறைவாகவும், அதிகளவிலும் கிடைப்பதால் பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கிறது என்று வெளிநாட்டு ராணுவ அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சீனாவை எதிர்க்க முடியுமா?
தைவான் நாட்டிற்கு சீனா மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தற்போது வரைக்கும் தைவான் நான்கு வகையிலான ட்ரோன்களை மட்டுமே வைத்துக் கொண்டுள்ளது. ஆனால், சீனா 50க்கும் மேற்பட்ட வகையிலான ட்ரோன்களை வைத்துக் கொண்டுள்ளது. பல ஆயிர எண்ணிக்கையில் வைத்துக் கொண்டுள்ளது. ஜெட் வேகத்தில் பறக்கும் ட்ரோன் முதல் விமானத்தை கண்காணிக்கும் ட்ரோன், தளத்தில் ராணுவப் படை ஆகியவற்றை கண்டறியும் வகையிலான ட்ரோன்கள் சீனாவிடம் உள்ளன.
உக்ரைன் ரஷ்யா போர் துவங்குவதற்கு முன்பு இருந்தே சீனா பெரிய அளவில் ட்ரோன்களை தயாரித்து வருகிறது. 1960ஆம் ஆண்டிலேயே ஆள் இல்லாத விமானங்களை சீனா தயாரித்து வந்தது. ரஷ்ய மாடலில் இந்த விமானங்களை தயாரித்து இருந்தது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் கட்சியின் காங்கிரஸ் மாநாட்டில் பேசி இருந்த ஜி ஜின்பிங், ''ஆள் இல்லாத போர் திறன் கொண்ட ட்ரோன்கள் தயாரிக்கப்படும்'' என்று தெரிவித்து இருந்தார்.
சீனாவிடம் ஏஐ அதாவது ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸ் திறன் கொண்ட டிரோன்கள் உள்ளன. இவை குறித்த இலக்கை அழிக்கக் கூடிய திறன் கொண்டவை. எதிரிகளை அலற வைக்கும் அளவிற்கு திறன் கொண்டதாக ஏஐ சார்ந்த ட்ரோன்கள் இருக்கும் என்று சீனா தெரிவித்துள்ளது.
தைவானும் சீனாவுக்கு போட்டியாக களத்தில் இறங்க முடிவு செய்துள்ளது. வரும் 2024ஆம் ஆண்டுக்குள் 3,200 ராணுவ ட்ரோன்களை தயாரிக்க தைவான் அரசு முடிவு செய்துள்ளது. 2 கிலோவுக்கும் குறைவான ட்ரோன்கள் முதல் 150 கிலோ மீட்டர் தொலைவிற்கு கண்காணிப்புகளை மேற்கொள்ளும் திறன் கொண்ட ட்ரோன்களை தயாரிக்க தைவான் திட்டமிட்டுள்ளது. ஒரு சிறிய டிரோன் கூட பெரிய ராணுவ டேங்கை அழிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
தற்போது தைவானை கண்காணிக்க சீனா ட்ரோன்களை அனுப்பி வருகிறது. இவற்றை தைவான் அரசாங்கத்தால் கண்காணிக்க முடியவில்லை. தைவான் பாதுகாப்புப் படையினர் அருகில் பறந்த ட்ரோனை பாதுகாப்புப் படை வீரர்கள் கற்கள் கொண்ட எறிந்த சம்பவமும் நடந்துள்ளது. இதை தைவான் நாட்டின் பத்திரிகைகள் மட்டுமின்றி நெட்டிசன்களும் நாட்டுக்கே அவமானம், தலைகுனிவு என்று பதிவிட்டு விமர்சித்துள்ளனர். இந்த நிலையில்தான் தைவான் அரசு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.