Singapore Clean Energy : சிங்கப்பூரின் தரைவழிப் போக்குவரத்து ஆணையம் (LTA) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், புதிதாக 360 மின்சார பொதுப் பேருந்துகளை சுமார் S$166.4 மில்லியனுக்கு வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஐந்து ஆண்டுகளில் LTAன் மிகப்பெரிய மின்சார பேருந்து கொள்முதல் இதுவாகும். இதற்கு முன்னதாக கடந்த 2018ம் ஆண்டில் சிங்கப்பூரில் தரைவழி போக்குவரத்துக்கு ஆணையம் சுமார் 50 மில்லியன் சிங்கப்பூர் டாலர் செலவு செய்து 60 மின்சார பேருந்துகளை 50 மில்லியன் S$ க்கு LTA வாங்கியது குறிப்பிடத்தக்கது. 2040ம் ஆண்டுக்குள் டீசல் வண்டிகளுக்கு முழு மாற்றாக இது அமையும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
சிங்கப்பூரின் இந்த புதிய 360 பேருந்துகள், சிங்கப்பூரில் மின்சார பொதுப் பேருந்துகளின் எண்ணிக்கையை 420 ஆக உயர்த்தியுள்ளது. தற்போதுள்ள ஒட்டுமொத்த பொதுப் பேருந்துகளில் ஏழு சதவீதம் இதன் மூலம் அதிகரித்துள்ளது என்றே கூறலாம். LTAன் நவம்பர் 25 தேதியிட்ட செய்தி வெளியீட்டின்படி, அனைத்து புதிய மின்சார பேருந்துகளும் மூன்று கதவுகளுடன் கூடிய ஒற்றை அடுக்கு பேருந்துகள் ஆகும்.
ஒவ்வொரு புதிய மூன்று-கதவு கொண்ட மின்சார சிங்கிள் டெக் பேருந்திலும் பயணிகளுக்கு அவர்களின் பயணம் பற்றிய ஆடியோ மற்றும் காட்சி தகவல்களை வழங்க, ஒருங்கிணைக்கப்பட்ட மூடிய-சுற்று தொலைக்காட்சி (CCTV)-மோதல் எச்சரிக்கை அமைப்பு, டிரைவர் சோர்வு எதிர்ப்பு அமைப்பு போன்ற பயணிகள் தகவல் காட்சி அமைப்பு பொருத்தப்பட்டிருக்கும். அத்துடன் டயர் அழுத்த கண்காணிப்பு அமைப்பு பொருத்தப்பட்டிருக்கும்.
LTA புதிய மின்சார பேருந்துகளை ஆதரிக்க EV சார்ஜிங் சிஸ்டம்களை வாங்கியுள்ளது. சுமார் S$46.1 மில்லியன் செலவழித்து சிங்கப்பூரின் செங்காங் மேற்கு, கிழக்கு கடற்கரை மற்றும் கலி பத்து ஆகிய இடங்களில் உள்ள பேருந்து டிப்போக்களில் அவை அமைக்கப்பட்டுள்ளது. கணினிகள் சார்ஜிங் வேகம் மற்றும் கால அளவை மேம்படுத்துவதற்கான "ஸ்மார்ட்" செயல்பாடுகளையும், நிகழ்நேர கண்காணிப்பு, கண்டறிதல், கட்டுப்பாடு மற்றும் அறிக்கையிடலுக்கான அம்சங்களையும் அவை கொண்டிருக்கும்.
டிசம்பர் 2024 முதல், புதிய சார்ஜிங் அமைப்புகள் படிப்படியாக நிறுவப்படும் அதே வேளையில், சட்டப்பூர்வமாக நிறுத்தப்படவுள்ள டீசல் பேருந்துகளுக்குப் பதிலாக எலக்ட்ரிக் பேருந்துகள் படிப்படியாக சிங்கப்பூரில் அறிமுகம் செய்யப்படும்.