ஒரு காலத்தில் கடல் கடந்து வணிகம் செய்ய சென்ற பல தமிழர்களுக்கு, இன்று இரண்டாவது தாயகமாகவே மாறிவிட்டது சிங்கப்பூர் என்றால் அது நிச்சயம் மிகையல்ல. சிங்கப்பூரின் பல்வேறு ஆட்சி மொழிகளில் தமிழ் மொழியையும் ஒன்று என்பதுதான் அதற்கு சாட்சி.
சிங்கப்பூர் மற்றும் தமிழகம் இடையே தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக ஒரு நல்லுறவு இருந்து வருகிறது. இந்நிலையில் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம், விரைவில் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு தினமும் தனது சேவையை அளிக்கவுள்ளது.
இதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வரும் ஸ்கூட் கூட்டு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள தகவலின்படி, வருகின்ற நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி முதல் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு தினசரி சேவையை அது துவங்க உள்ளது.
நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில்: ஆக.,6ஆம் தேதி தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!
அதேபோல சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் அக்டோபர் 29ம் தேதி முதல் தினமும் இரு விமானங்களை சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு இயக்க விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகையால் சென்னை சிங்கப்பூர் இடையே இனி வாரம்தோறும் பல விமானங்கள் இயங்க உள்ளதால் பயணிகளை பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை மட்டுமல்லாமல் ஹைதராபாத் மற்றும் பெங்களூருவில் இருந்தும் சிங்கப்பூருக்கு விமான சேவைகளை அளிக்க தயாராகி வருகிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. பெருந்தொற்று காலத்தில் சிங்கப்பூர் மற்றும் தமிழகம் இடையிலான விமான சேவையில் பெரும் பங்கை வகித்த விமான சேவை நிறுவனங்களில் ஸ்கூட் நிறுவனமும் ஒன்று.
மேலும் பெருந்தொற்று காலத்தில் சிங்கப்பூர் மற்றும் தமிழகம் இடையே, திருச்சி வழியாக பல சேவைகளை இயக்கியது இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றளவும் சென்னைக்கு இணையாக பல விமானங்கள் திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்கின்றது.