ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் பிரிக்ஸ் மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய 15ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஆகஸ்ட் 22ம் தேதி (இன்று) முதல் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் நேரடியாக கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் சென்றடைந்துள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக, சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரேசில் அதிபர் லுலா டா சில்வா ஆகியோரும் ஜோகன்னஸ்பர்க் சென்றடைந்துள்ளனர்.
பிரிக்ஸ் மாநாடு: தென் ஆப்பிரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடி!
இந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் பிரிக்ஸ் மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ரஷ்யா சார்பாக வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், பிரிக்ஸ் மாநாட்டில் நேரடியாக கலந்து கொண்டுள்ளார். இதற்காக அவர் ஏற்கனவே ஜோகன்னஸ்பர்க் சென்றடைந்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக கடந்த பல மாதங்களாகவே ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின், எந்த நாட்டுக்கும் செல்லவில்லை. மேலும், அவரது உடல்நிலை தொடர்பான வந்தந்திகளும் பரவி வருகின்றன. இதனிடையே, பிரிக்ஸ் மாநாட்டில் அவர் கலந்து கொள்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காணொலி வாயிலாக அவர் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக 2020ஆம் ஆண்டில் இருந்து பிரிக்ஸ் மாநாடு காணொலி காட்சி வாயிலாகவே நடைபெற்று வந்த நிலையில், நடப்பாண்டில் பிரிக்ஸ் மாநாடு நேரடியாக நடைபெறவுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பின் முதல்முறையாக பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் 4 நாடுகளின் தலைவர்களும் நேரடியாக பங்கேற்கின்றனர். புடின் மட்டும் காணொலி வாயிலாக கலந்து கொள்ளவுள்ளார்.