இங்கிலாந்தின் புதிய பிரதமருக்கான போட்டியின் முதல் சுற்றில் முன்னாள் பிரிட்டிஷ் நிதியமைச்சர் ரிஷி சுனக் அதிக வாக்குகளை பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
இங்கிலாந்தின் புதிய பிரதமருக்கான போட்டியின் முதல் சுற்றில் முன்னாள் பிரிட்டிஷ் நிதியமைச்சர் ரிஷி சுனக் அதிக வாக்குகளை பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து போரிஸ் ஜான்சன் ஆட்சியமைக்க தகுதியற்றவர் என்று கூறி அமைச்சா்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோா் அடுத்தடுத்து தங்களது பதவியை ராஜினாமா செய்தனா். மேலும், பிரதமா் போரிஸ் ஜான்ஸனும் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதனால் கடும் நெருக்கடிக்கு உள்ளான போரிஸ் ஜான்சன், பிரதமா் பதவியை ராஜினாமா செய்தார். இதை அடுத்து புதிய பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்கான போட்டியில் இங்கிலாந்தில் நிதி அமைச்சர் பதவியில் இருந்து அண்மையில் விலகிய இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனக் பங்கேற்பார் என்று கூறப்பட்டது. மேலும் அவா் வாக்கெடுப்பில் பங்கேற்றால், அவர் பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமிருப்பதாகவும் கூறப்பட்டது.
இதையும் படிங்க: பிரிட்டன் பிரதமராகும் இந்திய வம்சாவளி ரிஷி சுனக்கின்...குடும்ப எக்ஸ்குளூசிவ் போட்டோ...
இதனிடையே புதிய பிரதமர் தேர்வு முறைக்கான கால அட்டவணை மற்றும் விதிகள் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன. அதன்படி முதல் சுற்றில், ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்திருக்க வேண்டும். குறைவான எண்ணிக்கை பெற்றவர்கள் வெளியேற நேரிடும். இதில் 30க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றால் மட்டுமே முதல் சுற்றை கடக்க முடியும். அதன் பின்னர் எஞ்சிய வேட்பாளர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். இறுதியில் இருவர் மட்டுமே எஞ்சியிருக்க, அவர்களுக்கு கட்சியின் சிறப்பு உறுப்பினர்கள் வாக்களிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். ரகசிய எழுத்துமுறையில் நடைபெறும் முதல் வாக்கெடுப்பு 13ம் தேதி (இன்று) நடைபெறும். இரண்டாவது சுற்று ஜூலை 14 (நாளை) நடைபெறும். இதிலும், கடும் போட்டி நிலவும் பட்சத்தில், அடுத்தகட்ட ரகசிய வாக்கெடுப்பு முறை அடுத்த வாரம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகும் ரிஷி சுனக் யார்? வீடியோ வெளியிட்டு பரபரப்பு!!
மேலும் ஒற்றை வாக்கு அடிப்படையில், வெற்றியாளர் இறுதியில் தேர்வு செய்யப்படுவார். அதிக வாக்குகள் பெறுபவர் இங்கிலாந்தின் புதிய பிரதமராகவும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி அறிவிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று நடைபெற்ற முதல் சுற்று வாக்கெடுப்பில், இரண்டு வேட்பாளர்கள் வெளியேற்றப்பட்டதால், முன்னாள் பிரிட்டிஷ் நிதியமைச்சர் ரிஷி சுனக், அதிக வாக்குகளைப் பெற்றார். அதாவது சுனக் 88 வாக்குகளும், ஜூனியர் வர்த்தக அமைச்சர் பென்னி மோர்டான்ட் 67 வாக்குகளும் வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் 50 வாக்குகளும் பெற்றுள்ளனர். நிதி அமைச்சர் நாதிம் ஜஹாவி மற்றும் முன்னாள் கேபினட் அமைச்சர் ஜெர்மி ஹன்ட் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். சட்டமன்ற உறுப்பினர் கெமி படேனோக் 40 வாக்குகளையும், டாம் துகென்தாட் 37 வாக்குகளையும், சுயெல்லா பிராவர்மேன் 32 வாக்குகளையும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.