WHO- 14 நாட்களுக்கு மேல் இருந்தால் நோய் தொற்று கட்டுப்படுத்தும் பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் தொற்று இரட்டிப்பாகும் காலம் 47 நாட்கள் என்ற நிலையில் உள்ளது.
சென்னையில் இன்று கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு குறித்த விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி துவக்கி வைத்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், பெருநகர சென்னை மாநகராட்சியில் இதுவரை 5 லட்சம் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி சென்னை மாநகராட்சியின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்த பல்வேறு பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சியில் பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் தொற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னை சமூக நலப்பணி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், சென்னை சமூக களப்பணி திட்டத்தின் ஒரு பகுதியாக கோல்ட் ஹார்ட் பவுண்டேஷன் மற்றும் பைக்கிங் கம்யூனிட்டி ஆப் இந்தியா ஆகிய அமைப்புகளுடன் இணைந்து பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மோட்டார் வாகன விழிப்புணர்வு பேரணியை ரிப்பன் மாளிகை வளாகத்தில் இருந்து கொடியசைத்து ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளரிடம் பேசுகையில் தெரிவித்ததாவது:- தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனா தோற்று பரிசோதனை நாள்தோறும் 4,500 என்ற எண்ணிக்கையில் இருந்து தற்போது 13,000 பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. மார்ச் மாதம் முதல் இன்றைய தினம் வரை பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியும் 5 லட்சம் RT-PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே 5 லட்சம் பரிசோதனைகளை மேற்கொண்ட முதல் மாநகராட்சி சென்னை மாநகராட்சி. இந்த பரிசோதனைகளை மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் அவர்கள் தனி கவனம் செலுத்தி ரூபாய் 200 கோடி நிதி ஒதுக்கி உள்ளார். பரிசோதனைகளை அதிகரித்து, நோய்த்தொற்று உள்ளவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இறப்பு விகிதம் குறைந்த அளவிலேயே உள்ளது. மேலும் மாநகராட்சியின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, தொற்று உள்ளவர்களின் விகிதம் நாள்தோறும் 37 சதவீதத்திலிருந்து, தற்போது 10 முதல் 12 சதவீதம் மட்டுமே உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 12000 களப்பணியாளர்கள் கொண்டு நாள்தோறும் வீடு வீடாக சென்று காய்ச்சல் இருமல் மற்றும் சளி போன்ற தொடர்பான அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என கணக்கெடுப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன.
மேலும், 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு அதில் 11 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்களில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மாநகராட்சியில் நோய் பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி அவர்களை கண்காணிப்பதற்காக, தனிமைப்படுத்துதல், மேலாண்மை திட்டம் துவங்கப்பட்டு பணிகளை கண்காணிக்க 4800 நபர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்திட்டத்தின் மூலம் இதுநாள் வரை சுமார் 8.5 லட்சம் நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதில் 5 லட்சம் நபர்கள் வீடு திரும்பியுள்ளனர். இத்திட்டத்தின்கீழ் நாள்தோறும் 40 ஆயிரம் நபர்கள் கண்டறியப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதன்மூலம் தொற்று பரவும் விகிதம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தொற்று பாதித்த நபர் குறித்த தகவல் தலைமையிடத்தில் இணை ஆணையாளர் (சுகாதாரம்) மூலம் உடனடியாக அந்தந்த வார்டு சுகாதார ஆய்வாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு நோய் பாதித்த நபர் மூன்று மணி நேரத்திற்குள் அவர்கள் இல்லத்தில் இருந்து பரிசோதனை மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவமனைக்கோ அல்லது பாதுகாப்பு மையத்திற்கோ, அல்லது வீட்டிலேயே தனிமைப்படுத்தும் வசதி கொண்டவராக இருப்பின் அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சியில் அனுபவம் வாய்ந்த 150 மருத்துவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை நுண்ணளவில் கண்காணிக்க உதவி பொறியாளர் தலைமையில் வார்டு வாரியாக தனி குழுக்கள் அமைக்கப்பட்டு, பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. உலக சுகாதார நிறுவனம் ஒரு பகுதியில் தொற்று இரட்டிப்பாகும் காலம் என்பது, 14 நாட்களுக்கு மேல் இருந்தால் நோய் தொற்று கட்டுப்படுத்தும் பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் தொற்று இரட்டிப்பாகும் காலம் 47 நாட்கள் என்ற நிலையில் உள்ளது. இது மிகப்பெரிய கவனிக்கத்தக்க பணியாகும், குறிப்பாக ராயபுரம், திருவிக நகர், தண்டையார்பேட்டை போன்றதொரு அதிகம் பாதித்த மண்டலங்களில், மாநகராட்சியின் பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக தொற்று இரட்டிப்பாகும் காலமானது 90 நாட்களுக்கு மேல் உள்ளது. இந்தியாவில் தேசிய அளவில் தொற்று இரட்டிப்பாகும் காலம் 21 நாட்களாக உள்ளது என ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.