உக்ரைன் மீது ரஷ்யா கடந்த மாதம் 24ல் போரை துவக்கியது. தற்போது வரை உக்ரைனில் இருநாட்டு படை வீரர்கள் இடையே மோதல் நடக்கிறது. மேலும், ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. போர் தொடங்கி ஒரு மாதமாகியும் ரஷ்யாவால், உக்ரைன் தலைநகர் கீவ் நகரை இன்னும் கைப்பற்ற முடியவில்லை.
தீவிரமடையும் உக்ரைன் - ரஷியா போர் :
இதற்கிடையே அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளதோடு, உக்ரைனுக்கு உதவி செய்து வருகின்றன. இது ரஷ்யாவை கோபப்படுத்தி உள்ளது. இதனால் போரை தீவிரப்படுத்த ரஷ்யா முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பல நகரங்களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற ரஷ்யா வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு மிகப் பெரிய அளவில் ஆயுத உதவியை செய்ய வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், உலக நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளைச் செய்ய வேண்டும். நேட்டோ நாடுகள் அளவே இல்லாமல் ஆயுதங்களை சப்ளை செய்ய வேண்டும். அப்போதுதான் உக்ரைனையும், மக்களையும் காப்பாற்ற முடியும்.
நேட்டோ உதவ வேண்டும் :
ரஷ்யா தற்போது பாஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. இன்று காலை பாஸ்பரஸ் குண்டுகளை அவர்கள் வீசியுள்ளனர். அதில் பல குழந்தைகள், மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். நேட்டோ எங்களது மக்களைக் காக்க இன்னும் உறுதியான நடவடிக்கையை எடுக்காமல் உள்ளது. உலகிலேயே மிகப் பெரிய, வலுவான பாதுகாப்பு கூட்டணி நேட்டோ என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டம் வந்து விட்டது. உலகம் அதைக் காண காத்திருக்கிறது. குறிப்பாக உக்ரைன் மக்கள், நேட்டோவின் ஆக்ஷனுக்காக காத்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
புடினின் ரகசிய காதலி :
இந்த பதற்றமான சூழ்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ரகசிய காதலி என கூறப்படும், முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவாவை சிறை பிடிக்க ரஷ்யாவை எதிர்க்கும் மேற்கத்திய நாடுகள் திட்டம் தீட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.இதுதொடர்பாக இருவரும் இதுவரை பகிரங்கமாக எதையும் கூறவில்லை. இருப்பினும் பல்வேறு பத்திரிகைகளில் இவர்கள் இருவரும் காதலர்களாக இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
தற்போது இவர் குழந்தைகளுடன் ஸ்வீட்சர்லாந்தில் ஆடம்பர பங்களாவில் ரகசியமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ரஷ்யா, உக்ரைன் மற்றும் பெலாரஸ் நாடுகளை சேர்ந்தவர்கள் ஸ்வீட்சர்லாந்தில் இருந்து அலினா கபேவாவை வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக Change.org மூலம் இயக்கமாக செயல்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக ஜெர்மன், பிரஞ்சு, ஆங்கில மொழிகளில் உள்ள மனுக்களுக்கு இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அலினா கபேவா :
அலினா கபேவா 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் ரித்மிக் ஜிம்னாஸ்டிக்ஸிற்கான ஆல்ரவுண்ட் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர். சிட்னி 2000 ஒலிம்பிக்கில், அவர் வெண்கலம் வென்றார். இவர் உடலை வில்லாக வளைக்கும் திறன் பெற்றவர் ஆவார். 38 வயதான கபீவா முன்னாள் கால்பந்து வீரர் மராட் கபாயேவின் மகள். அவர் 1983 ஆம் ஆண்டு சோவியத் யூனியனில் உள்ள உஸ்பெக் SSR-ல் உள்ள தாஷ்கண்டில் பிறந்தார்.
கபேவாவும் புடினும் பல சந்தர்ப்பங்களில் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவை சேர்ந்த பல முக்கிய நிறுவனங்கள் கபேவா குடும்பத்திற்கு பணம் மற்றும் சொத்துக்கள் உட்பட பல பரிசுகளை வழங்கியுள்ளனர் என்ற தகவலும் வெளியானது. புடினால் சிறையில் அடைக்கப்பட்ட , எதிர் கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி ஏற்படுத்திய ஊழல் எதிர்ப்பு அறக்கட்டளை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
மிகப்பெரிய சொத்து வைத்திருக்கும் கபேவா :
புடினின் ரகசிய காதலி என கூறப்படும் கபேவா, புடினின் 'ரகசிய' குழந்தைகளின் தாய் என்றும், அவருக்கும் புதினுக்கும் பல குழந்தைகள் இருப்பதாகவும் ,ஆனால், ரஷ்ய அதிபர் அதிகாரப்பூர்வமாக தகவல் ஏதும் வெளியிடவில்லை என்றும் தொடர்ந்து உறுதிபடுத்தபடாத தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் 38 வயதான அலினாவின் சொத்து மதிப்பு $10 மில்லியன் என celebrity net worth பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
69 வயதான புடின் மற்றும் 38 வயதான அலினா தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகளும், இரட்டை பெண் குழந்தைகளும் இருப்பதாக கூறப்படுகிறது.இதையடுத்து, கடந்த 2 வாரங்களுக்கு முன் ,பெலாரஸ் மற்றும் உக்ரைன் நாட்டை சேர்ந்த குடிமக்கள் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், மனு ஒன்றில் கையெழுத்திட்டு, புடினின் காதலி அலினாகபேவாவை சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து ரஷ்யாவுக்கு நாடு கடத்தும்படியும் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தத்தில் புடினின் காதலியை கொண்டு வந்து நிறுத்தி, இந்த போருக்கு முடிவு கட்டுங்க என்று நெட்டிசன்கள் கதறுவதையும் சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது.