காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லியில் இருக்கும் அலுவலகத்தில் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். சோனியாவுடன், அவரது மகளும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி சென்று இருந்தார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டத்திற்கு புறம்பாக பணம் கையாடல், பங்கு வர்த்தனை நடந்து இருப்பதாக சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி மீது குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. இந்த வழக்கு தொடர்பாக இன்று சோனியா காந்தி அமலாகக்துறை முன்பு ஆஜரானார். அதற்கு முன்னதாக, உடல் நலம் பாதிப்பு ஏற்படும்போது, விசாரணையில் இருந்து வெளியேறலாமா என்று சோனியா தரப்பில் கேட்கப்பட்டுள்ளது.
இதற்கு பதில் அளித்த அமலாக்கத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் அலுவலகம் வந்து தயார் நிலையில் இருக்கலாம். ஆனால், விசாரணை நடக்கும்போது உடன் இருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளனர். சோனியாவின் வழக்கறிஞரும் உடன் இருப்பதற்கு அனுமதிக்கவில்லை.
சோனியாவுடன் சென்று இருந்த அவரது மகள் பிரியங்கா காந்தி தனியறையில் கையில் நெபுலைசருடன் காத்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சோனியா காந்திக்கு ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கு நெபுலைசர் கொடுக்க வேண்டியது இருப்பதால், பிரியங்கா தயார் நிலையில் இருந்ததாக தகவல் வெளியானது.
முதன் முறையாக அரசு சார்ந்த அமைப்பு ஒன்று சோனியா காந்தியிடம் இன்று விசாரணை மேற்கொண்டது. இதற்கு முன்னதாக, ராகுல் காந்தியிடம் இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து ஐந்து நாட்கள் அதாவது 50 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு இருந்தனர். இன்று விசாரணை முடிந்து சோனியா காந்தி வீடு திரும்பினார்.
வழக்கின் பின்னணி:
சுதந்திரத்துக்கு முன்பு ஜவஹர்லால் நேரு அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை துவக்கினார். இங்கிருந்து நேஷனல் ஹெரால்டு உள்பட பல பத்திரிகைகள் வெளியாயின. அப்போது இந்த நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி கடன் கொடுத்ததாக கூறப்பட்டது. நஷ்டம் காரணமாக கடனையும் திருப்பிச் செலுத்த முடியாமல், 2008 ஆம் ஆண்டில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், 2010 ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் பங்குகள் வெறும் ரூ.50 லட்சத்துக்கு யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றம் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்நிறுவனத்தின் 76 சதவீத பங்குகளை காங்கிரஸ் தலைவர் சோனியாவும், இவரது மகனும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.
பங்குகள் மாற்றியதில் ரூ.2 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் நடந்து இருப்பதாக டெல்லி நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது.