பாரிஸில் புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, பிரான்ஸ் உடனான தனது நீண்ட தொடர்பைப் பற்றி பிரதமர் பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவர் நேற்று பாரிஸில் புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே உரையாற்றினர். அப்போது பிரான்ஸ் உடனான தனது நீண்ட தொடர்பைப் பற்றி பிரதமர் பேசினார்.
அலையன்ஸ் ஃபிரான்சைஸின் ‘முதல் உறுப்பினர்’
40 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தின் அகமதாபாத்தில் திறக்கப்பட்ட அலையன்ஸ் ஃபிரான்சைஸ் (Alliance française) என்ற பிரான்ஸின் கலாச்சார மையத்தின் முதல் இந்திய உறுப்பினர் என்பதையும் அவர் நினைவு கூர்ந்தார். அந்த மையத்திலிருந்து தனது அடையாள அட்டையை பழைய பதிவுகளில் இருந்து கண்டுபிடிக்க தனது அரசாங்கம் எவ்வாறு முயற்சி எடுத்தது என்றும் அவர் கூறினார். மேலும் "பிரான்ஸ் உடனான எனது பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது. அதை என்னால் மறக்கவே முடியாது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, குஜராத்தின் அகமதாபாத்தில், பிரான்ஸின் கலாச்சார மையம், அலையன்ஸ் ஃபிரான்சைஸ் நிறுவப்பட்டது. அந்த கலாச்சார மையத்தின் முதல் இந்திய உறுப்பினர் இன்று உங்களுடன் பேசிக்கொண்டிருக்கேறேன்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் இந்தியாவின் UPI சந்தை விரிவாக்கத்திற்கு ஒரு பெரிய ஊக்கமாக, பிரான்ஸில் முதன்மையான உடனடி கட்டண முறையைப் பயன்படுத்த இந்தியா மற்றும் பாரிஸ் உடன்படிக்கைக்கு வந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். எனவே பாரிஸில், இந்திய சுற்றுலா பயணிகள் மொபைல் செயலி மூலம் இந்திய ரூபாயில் பணம் செலுத்தக்கூடிய இந்த சேவை தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.
மேலும் “பிரான்சில் UPIஐப் பயன்படுத்த இந்தியாவும் பிரான்சும் ஒப்புக்கொண்டுள்ளன. வரும் நாட்களில், இது ஈபிள் டவரில் இருந்து தொடங்கும், அதாவது இந்திய சுற்றுலாப் பயணிகள் இப்போது ரூபாயில் செலுத்த முடியும்” என்று தெரிவித்தார்.
யுபிஐ சேவையை வழங்கும் தேசிய அமைப்பான நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NCPI) பிரான்ஸின் வேகமான மற்றும் பாதுகாப்பான ஆன்லைன் கட்டண முறையான லைராவுடன் (Lyra) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
தொடர்ந்து பேசிய பிரதமர் பிரான்ஸில் முதுநிலைப் படிப்பைத் தொடரும் இந்திய மாணவர்களுக்கு இப்போது 5 வருட நீண்ட கால படிப்புக்கு பிந்தைய பணி விசா கிடைக்கும் என்று கூறினார். இதுபற்றி பேசிய போது " பிரான்ஸில் படிக்கும் மாணவர்களுக்கு 2 ஆண்டுகள் வேலை விசா வழங்கப்படும் என்று முன்பு முடிவு செய்யப்பட்டது, ஆனால் இப்போது பிரான்ஸில் இருந்து முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் படிப்புக்குப் பிறகு 5 ஆண்டுகள் வேலை விசா கிடைக்கும்" என்று பிரதமர் மோடி கூறினார்.
பிரான்ஸ் அரசின் உதவியுடன், மார்சேயில் வசிக்கும் இந்தியர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில், அங்கு புதிய தூதரகத்தை திறக்க இந்தியா முடிவு செய்துள்ளது என்றும் மோடி தெரிவித்தார். தனது சொந்த நாட்டில் இருப்பதை விட, பிரெஞ்சு கால்பந்து வீரர் கைலியன் எம்பாப்பேவுக்கு இந்தியாவில் அதிக ரசிகர்கள் இருப்பதாகவும் அவர் கூறினார். “பிரஞ்சு கால்பந்து வீரர் கைலியன் எம்பாப்பே இந்தியாவில் உள்ள இளைஞர்களிடையே சூப்பர்ஹிட். Mbappe ஒருவேளை பிரான்சை விட இந்தியாவில் அதிகமான மக்களுக்குத் தெரிந்திருக்கலாம்,” என்று மோடி கூறினார்.
பாரீஸ் சென்றடைந்த பிரதமர் மோடி; அணிவகுப்பு நடத்தி உற்சாக வரவேற்பு அளித்த பிரதமர் எலிசபெத் போர்ன்!