கொரோனா பாதிப்பு விரைவில் முடிவுக்கு வரும்! உலக மக்களின் வயிற்றில் பாலை வார்த்த நோபல் பரிசு பெற்ற சைண்டிஸ்ட்

By karthikeyan V  |  First Published Mar 26, 2020, 9:49 AM IST

கொரோனா வைரஸ் தொற்று விரைவில் முடிவுக்கு வரும் என்று நோபல் பரிசு பெற்ற அறிவியல் ஆய்வாளர் மைக்கேல் லெவிட் தெரிவித்துள்ளார்.
 


சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் பேரிழப்பை ஏற்படுத்திவருகிறது. கொரோனா உருவான சீனாவை விட, இத்தாலி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் கொரோனாவிற்கு பலியானோரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. 

இத்தாலியில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஸ்பெய்னில் 3500 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெய்னில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்டிவிட்டது. அமெரிக்காவிலும் கொரோனா கோர முகத்தை காட்டிவருகிறது. 

Latest Videos

உலகம் முழுதும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. 

இந்தியாவில் கொரோனாவால் 629 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 13 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவிலிருந்து தப்பிக்க, வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவிற்கு சரியான மருந்தும் கண்டுபிடிக்கப்படாததால், ஊரடங்கை பிறப்பித்துவிட்டு, கொரோனாவை கட்டுப்படுத்த சர்வதேசமே திணறிவருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு உலகம் முழுதும் அதிகரித்துவரும் நிலையில், கொரோனா வைரஸ் தொற்று விரைவில் முடிவுக்கு வரும் என நோபல் பரிசு பெற்ற அறிவியல் ஆய்வாளர் மைக்கேல் லெவிட் தெரிவித்துள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு வேதியியல் பிரிவில் நோபல் பரிசு பெற்ற மைக்கேல் லெவிட், அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தில் உறுப்பினராகவும் உள்ளார். இவர் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கொரோனா குறித்து ஆய்வு செய்துவருகிறார். இவர் கடந்த மாதம், சீனாவில் 80 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள். சுமார் 3000 பேர் உயிரிழப்பார்கள் என்று தெரிவித்திருந்தார். கிட்டத்தட்ட அவர் கூறிய அளவில் தான் தாக்கமும் இருந்தது.  அதேபோல சீனாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவும் கொரோனாவால் கடுமையாக பாதிக்கும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 75% பேர் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள். கொரோனாவால் அதிகமானோரை காவு கொடுத்த இத்தாலியில் பெரும்பாலானோர் முதியவர்கள். இத்தாலி மக்கள் தொகையீல் 75% முதியவர்கள் என்பதால்தான் அங்கு கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. ஆனால் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதம் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. எனவே கொரோனா வைரஸ் தொற்று விரைவில் முடிவுக்கு வரும் என மைக்கேல் லெவிட் கூறியுள்ளார்.

உலகமே கொரோனாவால் மரண பீதியில் இருக்கும் நிலையில், மைக்கேல் லெவிட்டின் கருத்து உலகமக்களின் வயிற்றில் பாலை வார்க்கும் செய்தியாக அமைந்துள்ளது.

click me!