நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கிய மறுதினமே ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு பயணக் கட்டணம் உயர்வாக இருப்பது முக்கியக் காரணமாக உள்ளது.
நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கிய அடுத்த நாளே ரத்து செய்யப்பட்டுள்ளது. போதிய பயணிகள் முன்பதிவு செய்யாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இனி வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் இந்தக் கப்பல் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசந்துறை செல்லும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்ட பிறகு சனிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இந்த சேவையை காணொளி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து 40ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கியது. இந்தக் கப்பல் போக்குவரத்து மூலம் நாகையில் இருந்து இலங்கைக்கு மூன்றரை மணிநேரத்தில் பயணிக்கலாம். இந்தக் கப்பலில் 150 பேர் வரை பயணிக்க முடியும்.
ஆபரேஷன் அஜய்: 3வது விமானத்தில் 197 இந்தியர்கள் இஸ்ரேலில் இருந்து தாயகம் திரும்பினர்
முதல் நாள் பயணத்திற்கு சிறப்புச் சலுகையாக கட்டணத்தில் 75 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்பட்டிருந்தது. முதல் நாளில் நாகையில் இருந்து காங்கேசன்துறை செல்ல 30 பேரும், இலங்கையில் இருந்து நாகை வருவதற்கு 26 பேரும் முன்பதிவுசெய்திந்தனர். ஆனால், இரண்டாவது நாளான இன்று 7 பேர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர்.
இதனால் போதிய அளவு பயணிகள் இல்லாததால் இன்று கப்பல் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இனி திங்கள், புதன், வெள்ளி என வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் இந்தக் கப்பல் போக்குவரத்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறும் வகையில் நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கி இருக்கிறது. ஆனால், மறுதினமே கப்பல் இயக்கம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு பயணக் கட்டணம் உயர்வாக இருப்பது முக்கியக் காரணமாக உள்ளது.
இந்தக் கப்பலில் ஒரு நபருக்கான கட்டணம் பயணக் கட்டணம் ரூ.6500 ஆகும். இத்துடன் 18 சதவீதம் ஜிஎஸ்டி தனி. இதனால் மொத்தமாக ஒரு பயணிக்கு ரூ.7670 கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், விமானத்தில் அனுமதிக்கப்படுவதைக் காட்டிலும் அதிக லக்கேஜ் எடுத்துச் செல்லும் வசதி இந்தக் கப்பல் சேவையில் உள்ளது. இந்தக் கப்பலில் பயணிக்கும்போது சுமார் 50 கிலோ வரை உள்ள பொருட்களை எடுத்துச் செல்லலாம்.
ஆன்லைனில் முதலீட்டில் ஏகப்பட்ட லாபமா? யோசிக்காம இந்த கும்பலிடம் மாட்டிக்காதீங்க..