
'ஆபரேஷன் அஜய்' திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து 197 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு மூன்றாவது விமானம் ஞாயிற்றுக்கிழமை தலைநகர் டெல்லியை வந்தடைந்தது. இஸ்ரேலில் இருந்து வந்த இந்தியர்களை டெல்லி விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர் வரவேற்றார்.
"பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சகத்திற்கு நன்றி மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்... பிரதமர் மோடி நாட்டின் குடிமக்களுக்காக அர்ப்பணிப்புடன் இருக்கிறார். இந்திய குடிமக்கள் இஸ்ரேலில் இருந்து பாதுகாப்பாக இங்கு அழைத்துவரப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பிய பிறகு மகிழ்ச்சியாக உள்ளனர்" என்று அமைச்சர் கிஷோர் கூறினார்.
ஆன்லைனில் முதலீட்டில் ஏகப்பட்ட லாபமா? யோசிக்காம இந்த கும்பலிடம் மாட்டிக்காதீங்க..
இந்த விமானம் சனிக்கிழமை இரவு இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்து டெல்லி நோக்கிம் புறப்பட்டது. "ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் மூன்றாவது விமானம் டெல் அவிவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டது. விமானத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பான பயணம் அமைய தூதரகம் வாழ்த்துகிறது" இந்தியத் தூதரத்தின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.
இஸ்ரேலில் உள்ள சுமார் 18,000 இந்தியர்கள் தாயகம் திரும்ப ‘ஆபரேஷன் அஜய்’ திட்டம் கடந்த வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. முதல் விமானம் 21 தமிழர்கள் உள்பட 212 இந்தியர்களுடன் வெள்ளிக்கிழமை டெல்லி வந்தது. சனிக்கிழமை வந்த இரண்டாவது விமானத்தில் 28 தமிழர்கள் உள்பட 235 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.
அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் பயங்கரவாதக் குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் மூண்டது. ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 1,300க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள். குழந்தைகள் உள்பட பலரை பிணைக்கைதிகளாகவும் வைத்துள்ளனர்.
ஹமாஸின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இஸ்ரேஸ் பாதுகாப்புப் படையின் தாக்குதல்களிலும் 1,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் குழுவினரை முற்றிலும் அழிக்கும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.
இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் அங்கு உள்ள இந்திய நிறுவனங்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறது. உதவி தேவைப்படும் இந்திய குடிமக்களுக்கு அவசர உதவிக்கான தொடர்பு எண் ஒன்றையும் வழங்கியுள்ளது. அதிகரித்து வரும் மோதல்களைக் கருத்தில் கொண்டு வெளியுறவுத்துறை அமைச்சம் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது.
விண்ணை முட்டும் உள்நாட்டு விமானக் கட்டணம்! சென்னை திரும்ப டிக்கெட் கிடைப்பதில் சிக்கல்!