ஆஸ்திரேலிய கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட மர்மப் பொருள் உள்ளூர் மக்களையும் அதிகாரிகளையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கிரீன் ஹெட் அருகே உள்ள கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது, இந்த மர்மப் பொருள் உள்ளூர் மக்களையும் அதிகாரிகளையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் வைரலான நிலையில், இது 2014-ல் காணாமல் போன மலேசிய MH370 விமானத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று சிலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும், விமானப் போக்குவரத்து நிபுணர் ஜெஃப்ரி தாமஸ் இந்த கோட்பாட்டை நிராகரித்தார், இந்த பொருள் கடந்த ஆண்டில் ஏவப்பட்ட ராக்கெட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று கூறி, MH370 அல்லது போயிங் 777 விமானத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
விமான நிபுணரும் ஆசிரியருமான ஜெஃப்ரி தாமஸ் மேலும் பேசிய போது "கடந்த 12 மாதங்களில் ஏவப்பட்ட ராக்கெட்டில் இருந்து, இந்தியப் பெருங்கடலில் விழுந்து, இந்த பொருள், அந்த ராக்கெட்டின் எரிபொருள் தொட்டியாக இருக்க வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார். மேலும் "இது MH370 என்ற மாயமான விமானத்தின் பாகமாக இருக்க வாய்ப்பில்லை. இது போயிங் 777ன் எந்தப் பகுதியும் இல்லை, உண்மை என்னவென்றால், MH370 ஒன்பதரை ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போனது, எனவே அந்த விமானம் தொடர்பான பொருள் கண்டுபிடிக்கப்பட்டால் அது அதிக தேய்மானம் அடைந்திருக்கும்” என்று கூறினார்.
இதனிடையே இந்த பொருள் குறித்து மேற்கு ஆஸ்திரேலியா காவல்துறை, ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படை மற்றும் கடல்சார் பங்காளிகள் அடங்கிய கூட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் “ "பொருளின் தோற்றம் மற்றும் இயல்பை தீர்மானிக்க பல்வேறு மாநில மற்றும் கூட்டாட்சி நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம் என்பதை உறுதியளிக்க விரும்புகிறோம். விசாரணை நடைபெற்று வருகிறது, மேலும் உறுதியான தகவல்கள் கிடைக்கும் வரை, முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். அதன் தோற்றம் கண்டறியப்படும் வரை, அந்த பொருள் அபாயகரமான பொருளாக கருதப்பட்டு வருகிறது. எனவே, அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போலி SMS வந்தா நம்பாதீங்க.. உங்கள் தகவல்கள் திருடப்படலாம்.. சிங்கப்பூர் காவல்துறை எச்சரிக்கை..