சிங்கப்பூரில் வீட்டுப் பணியாளராக வேலை செய்வதற்கான குறைந்தபட்ச வயது 23 என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில், இந்தியாவைச் சேர்ந்த தனது முதலாளியின் 70 வயது மாமியாரைக் கொலை செய்ததற்காக, மியான்மரைச் சேர்ந்த பணிப்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூ ஊடகங்கள், ஊடக அறிக்கை ஒன்றை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது. Zin Mar Nwe, என்ற அந்த மியான்மார் நாட்டை சேர்ந்த பெண் 26 முறை கத்தியால் குத்தி அவரை கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொலைசெய்யப்பட்ட அந்த பெண், தனது பணி பிடிக்காமல், தான் பணிபுரிந்து வரும் முகவரிடமே தன்னை திருப்பி அனுப்புவதாக மிரட்டியதால், கோபத்தில் அவரை கொன்றதாக அந்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த ஜனவரி 5, 2018ம் ஆண்டு வேலைக்காக சிங்கப்பூர் வந்தபோது அந்த பணிப்பெண்ணுக்கு 17 வயது.
ஆனால் அவரது பாஸ்போர்ட்டில் அவருடைய வயது 23 என்று குறிப்பிடப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது. சிங்கப்பூர் அரசை பொறுத்தவரை, சிங்கப்பூரில் வீட்டுப் பணியாளராக வேலை செய்வதற்கான குறைந்தபட்ச வயது 23 என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூருக்கு அந்த பெண் வந்த 4 மாதங்கள் கழித்து கொலைசெய்யப்பட்ட அந்த பெண்மணியின் மருமகள் வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை அந்த பெண் வேலை செய்துள்ளார், இந்த சூழலில் தான் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி கொலைசெய்யப்பட்ட அந்த பெண்மணி இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் சென்றுள்ளார். அடிக்கடி அந்த பணிப்பெண்ணை குறை சொல்வது, வேலைகளை உடனடியாக செய்யாத நேரத்தில் அவரை கையால் குத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
அந்த பணிப்பெண்ணுக்கு வழங்கப்பட்ட 450 சிங்கப்பூர் டாலர் மாத சம்பளம், அவருடைய ஏஜெண்டுக்கு கொடுக்கவேண்டிய தொகைக்கே சரியாக இருந்துள்ளது. இதில் அந்த இந்திய பெண்மணி அடிக்கடி அவரை குறைசொல்லி வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதி அந்த பெண்மணி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது அந்த பணிப்பெண்ணின் மீது கடும் கோபத்தில் இருந்த அந்த பெண்மணி, இன்று எப்படியாவது அந்த பணிப்பெண்ணின் ஏஜென்டிடமே அவரை திருப்பி அனுப்பிவிடவேண்டும் என்று கூறியுள்ளார். ஏற்கனவே சிங்கப்பூர் வந்த இந்த குறுகிய காலத்தில் அவர் பணி செய்யும் 3வது பணியிடம் இதுவென்பதால், மீண்டும் ஏஜென்டிடம் தன்னை பற்றி தவறாக கூறினால், தாய்நாட்டிற்கே போகவேண்டிய நிலை ஏற்படும் என்று அஞ்சியுள்ளார் அந்த பணிப்பெண்.
இதனால் கோபமுற்று சமயலறையில் இருந்த கத்தியை எடுத்து 26 முறை அந்த பெண்மணியை குத்தி கொன்றுவிட்டு, கையில் கிடைத்ததை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார். ஆனால் அவர் உடனைடியாக தாய்நாட்டிற்கு தப்பிசெல்லமுடியாத நிலையில் இருந்ததால், 5 நாட்கள் சிங்கப்பூரில் அங்குமிங்குமாக சுற்றியுள்ளார். இறுதியாக தனது ஏஜென்ட் அலுவலகத்திற்கு சென்றபோது அவர் சிக்கியுள்ளார்.