
தென் கொரியாவில் ஆண்டுதோறும் ஹாலோவீன் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்நாட்டில் கொண்டாடப்படாமல் இருந்த இந்த ஹாலோவீன் திருவிழா இந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் மாஸ்க் அணியாமல் கலந்துகொள்ளலாம் என அந்நாட்டு அரசு அறிவித்த முதல் விழா என்பதால், இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஹாலோவீன் திருவிழாவின் சிறப்பம்சம் என்னவென்றால், அதில் ஏராளமானோர் பேய் போன்று வேடமிட்டு விதி உலா வருவர். அந்த வகையில் தென்கொரியாவில் உள்ள சியோல் மார்க்கெட் பகுதியில் பேய் வேடமிட்டு ஏராளமானோர் வீதி உலா வந்தபோது தான் அந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மிகவும் குறுகலான சாலையைக் கொண்ட சியோல் நகரில் உள்ள இடாவூன் என்கிற மார்க்கெட் பகுதியில் ஒரே நேரத்தில் ஏராளமான மக்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கிய சிலர் அங்கேயே மயக்கம் போட்டு விழுந்தனர். ஒருசிலரோ மூச்சு விட முடியாமல் திணற சிறிது நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் கூட்ட நெரிசலில் கீழே விழுந்த போது ஒருவர் மீது ஒருவர் ஏறிச் சென்றதால் உடல் நசுங்கி பலியாகினர். இந்த துயர சம்பவத்தில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இதையும் படியுங்கள்... Donald Trump Twitter! மீண்டும் ட்விட்டரில் இணைந்தாரா டொனால்ட் ட்ரம்ப்? வைரலாகும் புதிய ட்வீட்
இதில் 50-க்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் பலியானதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி வெளிநாட்டவர்கள் 19 பேரும் இதில் சிக்கி பலியாகி உள்ளனர். அதுமட்டுமின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் 80க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் உலகையே உலுக்கி உள்ளது.
தென்கொரியாவில் கடந்த 2014-ம் ஆண்டு படகு கவிழ்ந்த விபத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதன்பின் அந்நாட்டில் நிகழ்ந்த மிகப்பெரிய விபத்து இந்த ஹாலோவீன் திருவிழா கூட்ட நெரிசல் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எதிர்பாரா விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... உலகின் டாப் 10 ஈவு இரக்கமில்லாத கொடூர சீரியல் கில்லர்கள்.. இந்த பட்டியலில் பெண்களும் இருக்கிறார்கள்!