புடினுக்கு எதிராக கிளர்ச்சி செய்த வாக்னர் குழு தலைவர் இறந்துவிட்டாரா? அமெரிக்க முக்கிய புள்ளி சொன்ன தகவல்

By Ramya s  |  First Published Jul 13, 2023, 1:14 PM IST

புடினுக்கு எதிராக கிளர்ச்சி செய்த வாக்னர் குழு தலைவர் எவ்கெனி பிரிகோஜின், இறந்திருக்கலாம் என்று முன்னாள் அமெரிக்க ஜெனரல் தெரிவித்தார்.


ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிரான கிளர்ச்சி தோல்வியடைந்த பிறகு வாக்னர் குழுவின் தலைவர் எவ்கெனி பிரிகோஜின் (Yevgeny Prigozhin) இறந்திருக்கக்கூடும் அல்லது சிறையில் இருக்கக்கூடும் என்று அமெரிக்க முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆயுதமேந்திய இந்த கிளர்ச்சி முடிவடைந்த 5 நாட்களுக்குப் பிறகு வாக்னர் குழுவின்  தலைவரை அதிபர் விளாடிமிர் புடின் சந்தித்ததாக ரஷ்யா கூறியதை அடுத்து இந்த தகவல் வந்துள்ளது.

அமெரிக்க முன்னாள் ஜெனரல் ராபர்ட் ஆப்ராம்ஸ் ஏபிசி நியூஸிடம் இதுகுறித்து பேசிய போது, "எனது தனிப்பட்ட மதிப்பீடு என்னவென்றால், ப்ரிகோஜினை நாம் மீண்டும் பார்ப்போமா என்பது சந்தேகம் தான். அவர் தலைமறைவாகிவிடுவார், அல்லது சிறைக்கு அனுப்பப்படுவார், அல்லது வேறு வழியில் கையாளப்படுவார் என்று நான் நினைக்கிறேன், ஆனால் நாம் அவரை மீண்டும் பார்ப்போமா என்பது சந்தேகம் தான்." என்று தெரிவித்தார்.

Latest Videos

undefined

ப்ரிகோஜின் இன்னும் உயிருடன் இருப்பதாக நினைக்கிறீர்களா என்று கேட்டதற்கு பதிலளித்த, ஜெனரல் ஆப்ராம்ஸ், "நான் தனிப்பட்ட முறையில் அவர் உயிருடன் இருப்பார் என்று நினைக்கவில்லை. அப்படி அவர் உயிருடன் இருந்தால், அவர் எங்காவது சிறையில் இருக்கக்கூடும் " என்று தெரிவித்தார்.

முன்னதாக இந்த வார தொடக்கத்தில், ப்ரிகோஜினும் அவரது ஆதரவளார்களும் விளாடிமிர் புடினைச் சந்தித்து அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருப்பதாக உறுதியளித்ததாக ரஷ்யா தெரிவித்திருந்தது. ஜூன் 29-ம் தேதி நடந்த இந்த சந்திப்பு மூன்று மணி நேர சந்திப்பில் ப்ரிகோஜின் மட்டுமின்றி, வாக்னர் குழுவின் தளபதிகளும் கலந்து கொண்டனர் என்று ரஷ்ய அதிபர் மாளிகையான் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியிருந்தார். மேலும் பேசிய டிமிட்ரி பெஸ்கோவ் "என்ன நடந்தது என்று தங்கள் தரப்பு கருத்துகளை தளபதிகளே முன்வைத்தனர். மேலும் அவர்கள் தங்கள் தாயகத்திற்காக தொடர்ந்து போராடத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்” என்று கூறியிருந்தார்.

வாக்னர் குழுவுக்கும் ரஷ்யாவின் இராணுவத் தலைமைக்கும் இடையே பல மாதங்களாக மோதல் நீடித்து வந்த நிலையில், கடந்த மாத இறுதியில், வாக்னர் கூலிப்படையினர் ஆயுதமேந்திய கிளர்ச்சியை அறிவித்து மாஸ்கோ நோக்கி அணிவகுத்து சென்றனர். ரஷ்யாவின் ராணுவ தலைமையை மாற்ற வேண்டும் என்று கோரி அவர் இந்த கிளர்ச்சியை அறிவித்தார். பிரிகோஜினின் இந்த கிளர்ச்சி, புடின் ஆட்சிக்கு கடந்த 23 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகவும் கடுமையான அச்சுறுத்தலாக பார்க்கப்பட்டது. இதை தொடர்ந்து பெலாரஸ் அதிபரின் சமரச முயற்சியால், தனது அணிவகுப்பை நிறுத்திய ப்ரிகோஜின், தனது படையுடன் தங்கள் தளத்திற்கே திரும்பினார். இதனால் ரஷ்யாவில் நீடித்த பதற்றம் தணிந்தது.

இதனிடையே நாட்டு மக்களிடம் உரையாற்றிய அதிபர் புடின், ப்ரிகோஜினை துரோகி என்று முத்திரை குத்தியதுடன், முதுகில் குத்தியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று உறுதி அளித்தார். ஆனாலும் கிளர்ச்சிக் குற்றச்சாட்டில் கூலிப்படைத் தலைவருக்கு எதிரான கிரிமினல் வழக்கு பின்னர் கைவிடப்பட்டது.

வாக்னர் குழு என்பது, ஆயிரக்கணக்கான வீரர்களை கொண்ட ஒரு தனியார் இராணுவ அமைப்பாகும். வாக்னர் குழுவின் படைகள் உக்ரைன் போரில் முக்கிய பங்கு வகித்தது. ரஷ்யா - உக்ரைன் போர் உச்சத்தில் இருந்த போது, பக்முத் நகரை கைப்பற்றுவதில் வாக்னர் குழுவினர் வெற்றி பெற்றனர். இருப்பினும், அக்குழுவின் தலைவர் பிரிகோஜின் அதிகளவில் ரஷ்ய இராணுவத் தலைவர்களால் விமர்சிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

புடினின் Ghost Train : ஆடம்பர ரயிலின் மறைக்கப்பட்ட விவரங்கள் கசிந்தது.. இத்தனை வசதிகளா?

click me!