ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணிற்கு அனுமதி மறுப்பு - பக்ரைனில் இழுத்து மூடப்பட்ட இந்திய ரெஸ்டாரண்ட்..!

By Kevin Kaarki  |  First Published Mar 27, 2022, 12:03 PM IST

ஹிஜாப் அணிந்து வந்த பெண் உணவக ஊழியர்களால் தடுத்து நிறுத்தப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


பக்ரைனில் உள்ள இந்திய உணவகம் ஹிஜாப் அணிந்து வந்த இந்திய பெண்ணிற்கு அனுமதி மறுத்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து இந்திய உணவகம் தற்போது பூட்டப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அத்துமீறலில் ஈடுபட்ட உணவக உரிமையாளர் சமூக வலைதளத்தில் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். 

ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணை அனுமதிக்க மறுத்த துணை மேலாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அந்த உணவகத்தில் துணை மேலாளராக பணியாற்றி வந்தவர் இந்தியாவை சேர்ந்தவர் ஆவார். 

Latest Videos

undefined

பெண் தடுத்து நிறுத்தம்:

உணவகத்தினுள் செல்ல முயன்ற ஹிஜாப் அணிந்து வந்த பெண் உணவக ஊழியர்களால் தடுத்து நிறுத்தப்படும் பரபர காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பக்ரைன் நாட்டு சுற்றுலா மற்றும் கண்காட்சி துரை விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் அந்நாட்டு விதிகளை கடுமையாக பின்பற்ற சுற்றுலா உணவகங்களிடம் வலியுறுத்தி இருக்கிறது.

"பொது மக்கள் மற்றும் அவர்களின் தேசிய அடையாளத்தின் மீது மோசமாக நடந்து கொள்ளும் எந்த விதமான நடவடிக்கைகளையும் நாங்கள் வன்மையாக மறுக்கிறோம்," என அதிகாரிகள் தெரிவித்தனர். 

சுற்றுலாவாசிகள்:

பக்ரைன் தலைநகர் மனமாவை அடுத்த அட்லியா பகுதியில் இந்திய உணவகமான லாண்டன்ஸ் சுமார் 35 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகிறது. அப்பகுதியில் மிகவும் பிரபல உணவகமாக செயல்பட்டு வரும் லாண்டன்சில் தினமும் ஏராளமானோர் வந்து சாப்பிட்டு செல்கின்றனர். இங்கு வருபவர்களில் பெரும்பாலானோர் உள்ளூரில் வசிப்பவர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் தான் கூறப்படுகிறது. சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர். 

இந்த நிலையில், தான் முஸ்லீம் பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்த நிலையில் அந்த உணவகத்தினுள் செல்ல முற்பட்டார். அப்போது உணவக ஊழியர்கள் அவருக்கு அனுமதி மறுத்துள்ளனர். முஸ்லீம் பெண் தன்னை உள்ளே அனுமதிக்க கேட்டுக் கொண்ட போதும், ஊழியர்கள் அவரை அனுமதிக்க மறுத்து விட்டனர். இந்த சம்பவங்கள் வைரல் வீடியோவில் பதிவாகி இருந்தன. வீடியோ வைரல் ஆனதும், உணவகம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருப்பதாக தெரிகிறது.

இலவச உணவு:

"மிக அழகிய பக்ரைனில் அனைத்து நாட்டினருக்கும் சேவையாற்றவே கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக லாண்டன்ஸ் இயங்கி வருகிறது. லாண்டன்ஸ்-க்கு அனைவரும் வரவேற்கப்படுகின்றனர். லாண்டன்ஸ் அனைவரும் வந்து தங்களின் குடும்பத்தாருடன் இணைந்து கொண்டாடி மகிழ்வதற்கான இடம். இந்த நிலையில் மேலாளர் செய்த தவறுக்காக அவரை பணியில் இருந்து இடைநீக்கம் செய்து இருக்கிறோம். நல்லெண்ண முயற்சியாக மார்ச் 29 ஆம் தேதி லாண்டன்ஸ்-இல் இலவச உணவு சாப்பிட அழைக்கிறோம்," என லாண்டன்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறது.

கர்நாடக உயர் நீதிமன்றம் அம்மமாநில கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்து இருப்பதை அடுத்து இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

click me!