அந்த கருப்பு பெட்டி மிகவும் சேதமடைந்து இருந்ததால் அதில் உள்ள விவரங்களை சேகரிப்பது சவாலான காரியம் என்றே கூறப்பட்டது.
கடந்த வாரம் மலைப்பகுதியில் விபத்தில் சிக்கிய சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் போயிங் 737-800 ஜெட் விமானத்தின் இரண்டாவது கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது என அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
132 பேருடன் குன்மிங்கில் இருந்து குவாங்ஷோ நோக்கி புறப்பட்ட போயிங் MU5735 விமானம் தரையில் இருந்து சுமார் 29 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. விமானம் கிழக்கு சீன பகுதியான குவாங்ஷோவை நோக்கி புறப்பட்டது. 100 கிலோமீட்டர்களில் தரையிறங்க இருந்த நிலையில், திடீரென விமானம் கீழே விழுத் தொடங்கியது.
கோர விபத்து:
இதை அடுத்து விமானம் கட்டுப்பாட்டை இழந்தால் செங்குத்தாக மலைப்பகுதியின் மீது அதிவேகமாக விழுந்து நொருங்கியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 132 பேரும் உயிரிழந்தனர். 1994 ஆண்டுக்கு பின் சீனாவில் அரங்கேறிய மிக கோர விமான விபத்தாக இது மாறியது. சைனா ஈஸ்டெர்ன் விமானம் ஏன் விபத்துக்குள்ளானது என்ற காரணம் இன்று வரை கண்டுபிடிக்கவில்லை.
சில தினங்களுக்கு முன் இந்த விமானத்தின் கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டது. எனினும், அந்த கருப்பு பெட்டி மிகவும் சேதமடைந்து இருந்ததால் அதில் உள்ள விவரங்களை சேகரிப்பது சவாலான காரியம் என்றே கூறப்பட்டது. இருந்த போதிலும், அதில் பதிவான விவரங்களை ஆய்வு செய்யும் பணிகள் பீஜிங்கில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இரண்டாவது கருப்பு பெட்டி:
விமான விபத்து நடைபெற்ற இடத்தில் தொடர்ந்து நடைபெற்ற சோதனையின் போது விமானத்தில் இருந்த இரண்டாவது கருப்பு பெட்டியும் கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது. இரண்டாவது கருப்பு பெட்டி தரையில் இருந்து சுமார் ஐந்து ஆடி ஆழத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வரும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கண்டெடுக்கப்பட்ட இரண்டாவது கருப்பு பெட்டியும் பீஜிங் நகரில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது.
விமான விபத்து பற்றி சீனா தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. போயிங் 737-800 விமானம் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்டது என்பதால், அமெரிக்காவும் ஆய்வில் பங்கேற்க சீனா அழைப்பு விடுத்து இருக்கிறது. அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் அமெரிக்கா மற்றும் சீனா அதிகாரிகளுடன் விசா மற்றும் கொரோனா விதிகள் தொடர்பான விவகாரங்களில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளன. பேச்சுவார்த்தைக்கு பின் ஆய்வில் கலந்து கொள்வதாக உறுதி அளித்து உள்ளது.