பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சாட்சியங்களை அழித்ததற்காக 3 ஆண்டுகள் கூடுதல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் தனது பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு சிங்கப்பூரில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரேமா எஸ். நாராயண சாமி என்ற பெண்ணுக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது மருமகனிடம் சிசிடிவி ரெகார்டை அழிக்க சொன்னதற்காக அவருக்கு மேலும் மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரின் சிறை தண்டனை 17 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது.
மியான்மர் நாட்டை சேர்ந்த பியாங் நகைஹ் டான், 14 மாதங்கள் தொடர்ச்சியான துன்புறத்தலுக்கு பிறகு, ஜூலை 26, 2016 அன்று மூளைக் காயம் காரணமாக இறந்தார். அவரின் கழுத்தில் கடுமையான காயம் இருந்தது. அப்பெண்ணை கடுமையாக தாக்கியும், அவருக்கு உணவு வழங்காமலும் பிரேமா துன்புறுத்தி உள்ளார். தொடர்ந்து உணவு வழங்கப்படாமல் பட்டினி போடப்பட்டதால் பியாய் 24 கிலோ மட்டுமே எடை இருந்தார்.
மேலும் அப்பெண் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு இரவில் ஜன்னல் கிரில்லில் கட்டப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளார். மேலும் குப்பைத் தொட்டியில் உணவை முயன்ற போதெல்லாம் அவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி இரவு பாதிக்கப்பட்ட பெண்ணை பிரேமா தனது மகள் மற்றும் சக குற்றவாளியான 43 வயதான காயத்திரி முருகையனுடன் தாக்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தனது பணிப்பெண்ணுக்கு இரவு உணவை மறுத்த காயத்திரி முருகையன், பாதிக்கப்பட்ட பெண்ணின் மணிக்கட்டை ஜன்னல் கிரில்லில் கட்டி வயிற்றில் எட்டி உதைத்துள்ளார். இந்த கொடூர தாக்குதலுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பெண் எழுந்திருக்கவில்லை, குற்றம் சாட்டப்பட்டவர் இதை உணர்ந்தபோது, அவளை எழுப்ப பல வழிகளில் முயற்சித்தார்கள் ஆனால் பலனளிக்கவில்லை.
பின்னர் அவர்கள் மருத்துவர்களை அழைத்து பரிசோதித்துள்ளனர். அப்போது அப்பெண் இறந்துவிட்டார் என்பது தெரியவந்துள்ளது. தற்போது காயத்திரி முருகையன் 30 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் 2021 ஆம் ஆண்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டார். எனினும் அவர் தனது தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார், ஆனால் அவரது மனு ஒரு வருடம் கழித்து தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் அருகில் இருந்த நபரின் காதை கடித்த இந்தியர்.. நீதிமன்றம் என்ன தண்டனை வழங்கியது?