அமெரிக்காவின் ஹெச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய பணி அனுமதியை கனடா அரசு அறிவித்துள்ளது
அமெரிக்காவில் H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு புதிய திறந்த பணி அனுமதியை கனடா அறிவித்துள்ளது. இது, அந்நாட்டில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் படிக்க செல்லும் மாணவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கனடாவின் குடிவரவு அமைச்சர் சீன் ஃப்ரேசர் கூறுகையில், “ஹெச்1பி விசா வைத்திருப்பவர்கள் 10,000 பேர் கனடாவுக்கு வந்து வேலை செய்ய அனுமதிக்கும் வகையில் திறந்த பணி அனுமதியை அரசாங்கம் உருவாக்கும்,” என தெரிவித்துள்ளார். கனடாவின் முதல் தொழில்நுட்ப திறமை வியூகத்தின் ஒரு பகுதியாக அமைச்சர் சீன் ஃப்ரேசர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
undefined
ஹெச்1பி விசா: இந்தியர்களுக்கு குட் நியூஸ்!
H-1B விசா வைத்திருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு படிப்பு அல்லது பணி அனுமதிகளும் இதன் மூலம் வழங்கப்படும் என கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹெச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கான இந்த அறிவிப்பு ஜூலை 16அம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும், அன்று முதல் பணிக்கான அனுமதியை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மூன்று ஆண்டுகள் வரை கனடாவில் பணி அனுமதியை பெறுவர். இந்த ஆண்டுகளில் கனடாவில் எங்கும், எந்தவொரு நிறுவனத்திலும் அவர்கள் வேலை செய்ய முடியும். அவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் சார்ந்திருப்பவர்கள் தேவைக்கேற்ப வேலை அல்லது படிப்பு அனுமதியுடன் தற்காலிக விசாவிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை ஓராண்டு அல்லது 10,000 விண்ணப்பங்களை பெறும் வரை நடைமுறையில் இருக்கும். இந்த எண்ணிக்கை முதன்மை விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே. அவர்களது குடும்ப உறுப்பினர்கள், சார்ந்திருப்பவர்கள் இதில் அடங்கமாட்டர். எக்ஸ்பிரஸ் என்ட்ரி திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான கூடுதல் அழைப்புகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டமானது, புதிய நடவடிக்கைகள் மற்றும் ஏற்கனவே உள்ள நடவடிக்கைகளில் மேம்பாடுகளை உள்ளடக்கியது. இது கனடாவின் வணிகத்தை மேம்படுத்த உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.