
இந்திய ராணுவத்தினர், பாகிஸ்தான் ஆக்கமிர்ப்பு காஷ்மீர் பகுதியில் நடத்திய “மின்னல் துல்லியத் தாக்குதலில்” பாகிஸ்தானில் இருந்து செயல்படும், லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த குறைந்தபட்சம் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் 18-ந்தேதி காஷ்மீரின் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, இந்திய ராணுவம் கடந்த 28-ந்தேதி ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்து, தீவிரவாதிகளையும், அவர்களின் முகாம்களையும் தங்களின் துல்லியத் தாக்குதல்(சர்ஜிகல் ஸ்டிரைக்) மூலம் அழித்துவிட்டு திரும்பினர்.
இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் ஏராளமானோர் கொல்லப்பட்டு இருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் அது குறித்த விவரம் ஏதும் இல்லை. இந்நிலையில், சமீபத்தில், பாகிஸ்தான் தீவிரவாத குழுக்கள், ராணுவத்தினருக்கு இடையே நடந்த ரேடியா உரையாடலை இந்திய ராணுவம் இடைமறித்து சமீபத்தில் கேட்டுள்ளது. அதில் பல தகவல்கள் கிடைத்துள்ளன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள துத்நியால் தளம் அருகே இருந்த முகாமில் இருந்து வந்த ரேடியோ அலைகளை இந்திய ராணுவத்தினர் இடைமறித்து கேட்டனர். அப்போது தீவிரவாத குழுக்களுக்கு இடையே நடந்த உரையாடலில், இந்திய ராணுவத்தின் துல்லியத் தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்திய ராணுவத்தின் இந்த மின்னல் தாக்குதலை தீவிரவாதிகளும், பாகிஸ்தான் ராணுவமும் சிறிது கூட எதிர்பார்க்கவில்லை, இந்த தாக்குதலால் அவர்கள் மிரண்டுள்ளனர் என்பது உரையாடலில் தெரியவந்துள்ளது.
இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்த தொடங்கியபோது, முகாமுக்குள் இருந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பயந்து பாகிஸ்தான் பகுதிகள் பலர் அலறியடித்து, உடைமைகளை அப்படியோ போட்டுவிட்டு ஓடியுள்ளனர் என்பதும் தெரியவந்தது.
நீலும் பள்ளத்தாக்கு அருகே, பாகிஸ்தான் ராணுவத்தினரின் ரேடியோ அலைகளை மறித்து இந்திய ராணுவம் கேட்டது. அதில், இந்திய ராணுவத்தின் தாக்குதலில் குறைந்தபட்சம் லஷ்கர் தொய்பா அமைப்பைச் சேர்ந்த 10 தீவிரவாதிகளும், ராணுவ வீரர்கள் 2 பேரும் கொல்லப்பட்டனர் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், யாருக்கும் தாக்குதல் சேதம் குறித்து யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, இரவோடு இரவாக, அனைத்து தீவிரவாதிகளின் உடல்களையும் அவசர கதியில் ராணுவ வாகனங்களில் அள்ளிப்போட்டு பாகிஸ்தான் ராணுவம் அப்புறப்படுத்தியுள்ளது.
குறிப்பாக தாக்குதல் நடத்தப்பட்டு மறுநாள் காலை 8.30க்கு பின், பாகிஸ்தான் பகுதியில் இருந்து எந்தவிதமான ரேடியோ அலைகளும் இல்லை என்பதை இந்திய ராணுவம் உறுதி செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் ராணுவத் தாக்குதலுக்கு பின், பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லையில் இருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என தலைதெறிக்க ஓடியிருப்பது தெரியவந்துள்ளது.
இவ்வள ளவு சம்பவம் நடந்துள்ளது. ஆனால், இந்தியா ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தவில்லை என மீசையில் மண் ஒட்டாமல் பாகிஸ்தான் கூறி வருகிறது.