
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நிலையில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பை மாற்றக் கோரி அவரின் கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஜான் மெக்கெயின் உள்ளிட்ட பல செனட்டர்கள் டிம்புக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றனர்.
பெண்கள் குறித்த ஆபாச பேச்சு சர்ச்சையில் டிரம்புக்கு கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நவம்பரில் தேர்தல்
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 8-ந் தேதி நடக்க உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி சார்பில் தொழிலதிபர் டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர். இருவருக்கும் சரிநிகர் ஆதரவு இருப்பதால் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. இருவரும் காரசாரமாக விவாதங்களில் ஈடுபட்டு, ஒருவொருக்கு ஒருவர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
வீடியோ வெளியீடு
இந்நிலையில் அதிபர் வேட்பாளர்களுக்கான 2-ம் கட்ட விவாத நிகழ்ச்சி இன்று நடைபெற இருந்த நிலையில் வெள்ளிக்கிழமையன்று “வாஷிங்டன் போஸ்ட்” நாளேடு டிரம்ப் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டது.
அதில் கடந்த 2005-ம் ஆண்டு ஓரு நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், பெண்கள் குறித்து மிகவும் கொச்சையாக, ஆபாசமான முறையில் பேசியிருந்தார். இந்த வீடியோ வெளியாகி நாடுமுழுவதும் பெரும் சர்ச்சையை உண்டாக்கி, டிரம்ப் மீதான மரியாதை தவிடு பொடியாக்கியது. இதையடுத்து, டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் பேஸ்புக் மூலம் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். மேலும் குடியரசுக் கட்சிக்குள்ளேயே டிரம்பின் பெண்கள் குறித்த ஆபாசப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
ஹிலாரிக்கு “அல்வா”
பெண்கள் குறித்த ஆபாச பேச்சு சர்ச்சையில் டிரம்ப் சிக்கியது, ஹிலாரி கிளிண்டனுக்கு “அல்வா” சாப்பிட்டது போல் ஆகிவிட்டது. இதை சும்மா விடுவாரா ஆளும் கட்சி வேட் பாளர் ஹிலாரி கிளிண்டன், “ பெண்கள் மீதான மோசமான பார்வை கொண்ட ஒருவரையா அதிபரா தேர்வு செய்யப்போகிறீர்கள்” என கடும் விமர்சனத்தை வைத்து அனல் பறக்க வைத்துள்ளார்.
ஆதரவு வாபஸ்
இந்த சூழலில், குடியரசுக்கட்சியின் முக்கிய செனட்டரான ஜான் மெக்கெயின் உள்ளிட்ட சிலர் டிரம்புக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப ப் பெறுவதாக அறிவித்துள்ளார்.
செனட்டர் ஜான் மெக்கெயின் கூறுகையில் “ டொனால்ட் டிரம்ப் கட்சியின் விதிமுறைக்கு ஏற்ப ஏராளமான பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றுள்ளார் என்பதற்காக அவருக்கு மரியாதை அளிக்கிறேன். ஆனால், டிரம்ப் பெண்கள் குறித்து ஆபாசமாக பேசிய வீடியோ வெளியான பின் அவருக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க முடியாது. அவருக்கு நிபந்தனையின் பேரில்தான் ஆதரவு தர முடியும்” எனத் தெரிவித்தார்.
மேலும், செனட்டர் கெல்லி அயோட்டி டுவிட்டரில் கூறுகையில், “ நான் ஒரு தாய், ஒரு அமெரிக்க குடிமகள். அதிபர் தேர்தலில் பெண்கள் குறித்த மோசமான கண்ணோட்டம் கொண்ட ஒருவருக்கு என்னால் ஆதரவு தர முடியாது” எனத் தெரிவித்தார்.
புதியவேட்பாளர்
இது மட்டுமல்லாமல், குடியரசுக் கட்சியின் முக்கிய தலைவர்கள் அதிபர் வேட்பாளராக டிரம்பை நீக்கிவிட்டு வேறு ஒருவரை நியமிக்க வேண்டும் என கட்சியின் தலைமை வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக குடியரசுக் கட்சி அவரசக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“முடியாது, மாட்டேன்”
ஆனால், இந்த அளவுக்கு எதிர்ப்புக்களையும் சமாளிக்கும் டொனால்ட் டிரம், போட்டியில் இருந்து விலகப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். “தி நியூயார்க் டைம்ஸ்” நாளேட்டுக்கு டிரம்ப் அளித்துள்ள பேட்டியில் கூறுகையில், “ நான் அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதற்கு வாய்ப்பே இல்லை. நான் பயந்து ஓடமாட்டேன். நான் எனது ஆதரவாளர்களிடம் நம்முடியாத அளவுக்கு ஆதரவைப் பெற்றுள்ளேன். ஹிலாரிதான் உண்மையில் மோசடி வேட்பாளர்” எனத் தெரிவித்துள்ளார்.
பின்னடைவு
அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில், டிரம்புக்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு, ஆதரவு வாபஸ் பெறுவது ஆகியவற்றால் அவர் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார். டிரம்புக்கு இந்த விவகாரம் பெரும் பின்னடைவாகவும் அமைந்துள்ளது.