
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளின் உறவுகள் மேம்பட வாய்ப்பில்லை என பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இஸ்லாமாபாதில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் நேற்று பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “ ஆசியப் பிராந்தியத்தில் இந்தியா ஆக்ரோஷமாக,ஆதிக்க மனப்பான்மையுடன் நடந்து கொள்வதை பாகிஸ்தான் தடுத்து வருகிறது. இரு நாட்டு உறவுகளும் சரிசமமாக மேம்படுத்தப்பட வேண்டும்.
ஆனால், இந்தியாவில் பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் இருநாட்டு உறவுகளும், குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைய வாய்ப்பு இல்லை.
காஷ்மீரில் இந்திய ராணுவம் செய்த காட்டுமிராண்டித்தனங்களை எதிர்த்தும், போர்நிறுத்த ஒப்பந்தங்களை இந்தியா மீறியது, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் இந்தியாவின் மிரட்டல், பலுசிஸ்தானின் இந்தியாவின் தலையீடு ஆகியவற்றைக் கண்டித்து நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒட்டுமொத்த உலக நாடுகளும், பாகிஸ்தானும் காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் அடக்குமுறைகளை கண்டித்து வருகின்றன. அந்த மாநில மக்களுக்கு தார்மீக, நிர்வாக, அரசியல் ஆதரவுகளையும் அளித்து வருகின்றன.
உலகின் பல்வேறு படிநிலைகளில் பெரும்பாலானோர் இந்தியா-பாகிஸ்தான் பேச்சு மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என கருதுகின்றனர். இந்தியாவின் திட்டப்படி எல்லைப்பகுதியை சீல் வைப்பதால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படப்போவதில்லை'' எனத் தெரிவித்தார்.
இந்தியாவில் சொத்துக்களா?
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உறவினர்களுக்கு இந்தியாவில் சொத்துக்கள் இருப்பதாக பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் கூறிய குற்றச்சாட்டை அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.
இது குறித்து நவாஸ் ஷெரீப் குடும்பத்தின் செய்தித்தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், “ பிரதமர் நவாஸ் ஷெரீப் மகன்களுக்கோ, அல்லது உறவினர்களுக்கோ இந்தியாவில் எந்தவிதமான வர்த்தக நிறுவனங்களும் சொந்தமாக கிடையாது. இம்ரான் கான் தவறான பரப்புரைகள் மூலம் நாட்டை வழிநடத்தக்கூடாது.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும், பொய்களையும் பரப்புவதற்கு இம்ரான் கான் வெட்கப்பட வேண்டும்'' எனத் தெரிவித்தார்.