
பாகிஸ்தானின் வலிமையான உளவு துறையான ஐ.எஸ்.ஐ. அமைப்பின் தலைவர் ரிஸ்வான் அக்தரை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது.
இந்தியாவின் எல்லைக்குள் தீவிரவாதிகளை அனுப்புவதிலும், அவர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. முக்கியப் பங்காற்றுகிறது.
இந்த சூழலில் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் உளவுத்துறை தலைவராக ரிஸ்வான் அக்தர் 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். இவர் நியமிக்கப்பட்டதில் இருந்து இந்தியாவின் எல்லைக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவுவது, துப்பாக்கி சூடு நடத்துவது, ராணுவ முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது.
இவரின் பதவிக்காலம் வரும் 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் முடிவடையும் சூழலில், ரிஸ்வான் அக்தரை பதவிக் காலம் முடியும் முன்பே மாற்ற பிரதமர் நவாஸ்ஷெரீப் முடிவு செய்துள்ளார். இதற்கான பணிகள் தொடங்கியுள்ளதால், அடுத்த சில வாரங்களில் ரிஸ்வான் மாற்றப்படுவார் எனத் தெரிகிறது.
எல்லை தாண்டிய தீவிரவாத தாக்குதல், தீவிரவாதத்தை பிராந்தியத்தில் பரப்புதல், ஆதரவளித்தல் போன்ற நடவடிக்கையால் சர்வதேச அளவில் கண்டனத்தை பாகிஸ்தான் சம்பாதித்து வருகிறது. மேலும், பாகிஸ்தானை ஆசியப் பிராந்தியத்தில் தனிமைப்படுத்தவும் இந்தியா நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
அதற்காக நவம்பரில் இஸ்லாமாபாத்தில் நடக்க இருந்த சார்க் மாநாட்டையும் இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் புறக்கணித்தன. இந்தியாவின் அடுக்கடுக்கான நடவடிக்கையால் அதிர்ந்த பாகிஸ்தான் இப்போது உளவுத்துறை தலைவரை மாற்ற முடிவு செய்துள்ளது.
ரிஸ்வான் அக்தர் மாற்றப்படும் பட்சத்தில் அவருக்கு பதிலாக லெப்டினென்ட் ஜெனரல் நவீத் முக்தர் நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது.
அதேபோல, பாகிஸ்தானின் ராணுவத் தலைவர் ராகீல் ஷெரீப் நவம்பர் மாதத்தோடு ஓய்வு பெறுகிறார். அவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா அல்லது ஓய்வு பெறுவாரா என்பது மர்மமாகவே இருக்கிறது. ஆனால், சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தான் பதவி நீட்டிப்பு கோரப்போவதில்லை என ராகீல் ஷெரீப் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.