Explained:சூடான் நாட்டின் சர்வாதிகாரி ஒழிந்தார்; அதிகார போதை ஒழிந்ததா? சூறையாடப்படும் ஏழை நாடு; காரணம் என்ன?

Published : Apr 18, 2023, 04:39 PM IST
Explained:சூடான் நாட்டின் சர்வாதிகாரி ஒழிந்தார்; அதிகார போதை ஒழிந்ததா?  சூறையாடப்படும் ஏழை நாடு; காரணம் என்ன?

சுருக்கம்

சூடான் நாட்டில் என்னதான் நடக்கிறது. இந்தியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 31  பழங்குடியின மக்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

சூடான் நாட்டில் கடந்த சனிக்கிழமை முதல் திடீரென ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே பெரிய அளவில் மோதல் வெடித்து வருகிறது. இதுவரை இந்தியர்கள் உள்பட 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1800க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். சூடான் தலைநகரமான கார்ட்டோம் போர்க்களம் போல காட்சியளிக்கிறது. இரண்டு தரப்பிலும் டேங்கர்கள், ஆயுதங்கள் கொண்டு போரிட்டு வருகின்றனர். இந்த மோதலுக்கு யார் தான் காரணம் என்று பார்க்கலாம்.

உமர் அல்-பஷீர் ஒழிப்பு:
முன்னாள் ராணுவ அதிகாரியான உமர் அல்-பஷீர் சூடான் நாட்டை 30 ஆண்டுகளாக இரும்புக் கரம் மற்றும் கண்மூடித்தனமான வன்முறையுடன் ஆட்சி செய்தார். சர்வாதிகாரியாக செயல்பட்டார். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், பொதுமக்களின் எழுச்சியால் தூக்கியெறியப்பட்டார். இனி ஆப்பிரிக்காவிலேயே வளங்கள் நிறைந்த நாடாக இருக்கும் சூடானில் சுதந்திரக் காற்று சுவாசிக்க முடியும் என்று நம்பினர். சிறந்த நிர்வாகம் கொண்டு வரப்படும், சிறந்த நிர்வாகி நாட்டை ஆட்சி செய்வார் என்றெல்லாம் மக்கள் கனவு கண்டனர். 

ராணுவத்தின் கையில்:
ஆனால், சூடானின் சோகம் என்னவென்றால், பஷீர் கட்டியெழுப்பிய அரக்கத்தனமான ஆட்சி என்றால், அவர் ஆட்சி வீழ்ச்சி அடைந்த இரண்டு ஆண்டுகளுக்குள் ராணுவம் திரும்பியது. இப்போது, இரண்டு உயர்மட்ட ஜெனரல்களுக்கு இடையே அதிகாரப் போராட்டம் சூடானை உள்நாட்டுப் போரின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளது. 

வாடிக்கையாளருக்கு சொந்த ரத்தத்தை ஊற்றி கொடுத்த பணிப்பெண்!! அதுவும் எதில் கலந்து கொடுத்தார் தெரியுமா?

ராணுவ மோதல்கள்:
கடந்த சனிக்கிழமையன்று சூடான் தலைநகரான கார்ட்டோம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் ராணுவம் மற்றும் விரைவு ஆதரவுப் படைகளுக்கு இடையிலான மோதலில் பலர் உயிரிழந்தனர்.  கடந்த மூன்று நாட்களில் மட்டும் 200க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்தத்திற்கான சர்வதேச அழைப்புகள் இருந்தபோதிலும், லெப்டினன்ட் ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் மற்றும் துணை லெப்டினன்ட் ஜெனரல் முகமது ஹம்தான் டகாலோ, தாக்குதல்களுக்கு ஒருவரையொருவர் குற்றம்சாட்டி பேச்சுவார்த்தை நடத்த மறுத்து வருகின்றனர். ரஷ்யா மற்றும் சவுதி அரேபியாவின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் ராணுவத்தின் ஆதரவைப் பெற்று இருக்கும் டகாலோ, ஜனாதிபதி மாளிகையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், ஜெனரல் புர்ஹானை நீதியின் முன் நிறுத்தப் போவதாகவும் கூறி வருகிறார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்களை ராணுவம் மறுத்தும், விரைவு ஆதரவுப் படைகள் மீது வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

மோதலுக்கு காரணம்:
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உமர் அல் பஷீர் ஆட்சியை விரட்டியடித்து ஆட்சிக்கு வந்தனர். இந்த இரண்டு ராணுவ ஜெனரல்களும் ஒருவருக்கொருவர் கைகோர்த்து செயல்பட்டு வந்தனர். இவர்களுக்கு எதிராக உள்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச அளவில் இருந்து அழுத்தம் அதிகரித்தது. மக்களிடமே திரும்ப ஆட்சியை கொடுத்து விடலாம் என்று இருவரும் முடிவுக்கு வந்தனர். ஆனால், ஆட்சி மாற்றம் எப்படி செய்வது, யார் கையில் கொடுப்பது என்பதில் இருவருக்கும் மோதல் வெடித்தது. 

முட்டுக்கட்டை:
முக்கிய ராணுவ அமைப்புடன் விரைவு ஆதரவுப் படையை இணைக்க வேண்டும் என்பது புர்ஹானின் முடிவு. ஆனால், அப்படி செய்தால் தனக்கான அதிகாரம் பறிக்கப்படும் என்பது டகாலோவின் எண்ணம். இப்படி அதிகார மாற்றத்திற்குப் பின்னர் இரண்டு ஆண்டுகளில் மக்களாட்சியை கொண்டு வர வேண்டும் என்று விரும்பினர். ஆனால், அது நிறைவேறவில்லை. இதை நிறைவேற்ற பத்தாண்டுகளுக்கு டகாலோ முட்டுக்கட்டை போட வேண்டும் என்று திட்டமிட்டார். இப்படி இருவருக்குள்ளும் நம்பிக்கையின்மை நாளுக்குள் நாள் அதிகரித்தது. இறுதியில் மோதல் வெடித்தது. 

பசி பட்டினி:
உள்நாட்டு மோதலை சூடான் நாடு வரலாறாக கொண்டுள்ளது. இது தற்போது முழு உள்நாட்டுப் போருக்குள் இழுத்துச் சென்றுள்ளது. பொருளாதார நெருக்கடி, விண்ணை முட்டும் பணவீக்கம், பசி பட்டினி ஆகியவற்றுடன் சூடான் மக்கள் போராடி வருகின்றனர். ஆனால், ராணுவ ஜெனரல்கள் தற்போது விரும்புவது உள்நாட்டுப் போராக உள்ளது. 

துபாய் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - 4 இந்தியர்கள் உட்பட 16 பேர் பலியான துயர சம்பவம்

ஆட்சிக் கவிழ்ப்பு:
மற்ற ஆப்பிரிக்க நாடுகளைக் காட்டிலும் அதிகமான ஆட்சிக் கவிழ்ப்புகளை சூடானில் அரங்கேறியுள்ளது. 1956 ஆம் ஆண்டில், இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து, 1958, 1969, 1985, 1989, 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் ஆட்சிக்கவிழ்ப்புகள் நடந்துள்ளன. 1989 ஆம் ஆண்டு  நடந்த ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னர், முப்பது ஆண்டுகளாக பஷீர் சர்வாதிகாரியாக ஆட்சி செய்தார். ரகசிய போலீஸ், எதிர்க்கட்சி அடக்குமுறை, ஊழல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டனர். 2019 ஆம் ஆண்டு, பஷீர் பதவி நீக்கம் செய்யப்பட்டபோது பலருக்கும் ஆச்சரியமாகவே இருந்தது. 

தேர்தலுக்கு முட்டு:
ஆனால் பஷீரின் வெளியேற்றம் ஜனநாயக ஆட்சியை கொடுக்கும் என்ற நம்பிக்கை குறுகிய காலமே நீடித்தது. அவர் வெளியேற்றப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல்கள் நடைபெறவிருந்தது. அப்போது, ராணுவம் ஒரு உள்நாட்டுப் போரைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, தனக்கான  அதிகாரத்தைக் கைப்பற்ற முடிவு செய்தது.

அண்டை நாடுகள்:
சூடான் ராணுவத் தலைவர்களின் இந்த அதிகார மோதலால் அண்டை நாடுகள் தங்களது கதவுகளை அடைத்துக் கொண்டன. சூடானுக்கு மேற்கில் இருக்கும் சாட் ஏற்கனவே எல்லையில் தனது கதவுகளை மூடிக் கொண்டது. இந்த மோதல் தெற்கு சூடானுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டில் தான் சூடான் நாட்டில் இருந்து தெற்கு சூடான் பிரிந்தது. தொடர்ந்து உள்நாட்டு மோதல் நீடித்து வந்தால், இது தெற்கு சூடானையும் பாதிக்கும் என்ற கருத்து எழுந்துள்ளது.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!
ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!