வன்முறையாக மாறிய போராட்டங்கள்.. 105 பேர் பலி.. வங்கதேசத்தில் ஊரடங்கு அமல்.. நாடு திரும்பும் இந்தியர்கள்..

Published : Jul 20, 2024, 10:21 AM IST
வன்முறையாக மாறிய போராட்டங்கள்.. 105 பேர் பலி.. வங்கதேசத்தில் ஊரடங்கு அமல்.. நாடு திரும்பும் இந்தியர்கள்..

சுருக்கம்

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக மாறிய நிலையில் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக அரசாங்க வேலைகளில் வழங்கப்படும் இடஒதுக்கீடு தொடர்பாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. வங்கதேசத்தின் சுதந்திரத்திற்காக போராடிய போர் வீரர்களின் உறவினர்களுக்கு அரசு வேலைகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் டாக்கா மற்றும் பிற நகரங்களில் போராட்டக்காரர்கள் பெரும்பாலும் மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்கள் வன்முறையாக மாறிய நிலையில் இதில் இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளனர், 1500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

இதனால் வங்கதேசம் முழுவதும் அசாதாரண சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசாங்கம் நேற்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், அமைதியை நிலைநாட்டும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று நடந்த போராட்டத்தில் காவல்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் போராட்டக்காரர்கள் மீது தோட்டாக்கள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டத்தை கலைத்தனர். இதை தொடர்ந்தே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் தலைநகர் டாக்காவில் வெள்ளிக்கிழமை அனைத்து கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த இடஒதுக்கீடு முறை பாரபட்சமானது என்றும், தகுதியின் அடிப்படையில் தான் வேலை வழங்கப்பட வேண்டும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, நாட்டின் சுதந்திர போரில் ராணுவ வீரர்கள் செய்த பங்களிப்புகளுக்கு அதிக மரியாதை அளிக்க வேண்டும் என்றும், அதற்கு இட ஒதுக்கீடு முறை சரியானது என்றும் கூறிவருகிறார்.

இந்த படை போதுமா..! இன்னும் கொஞ்சம் வேணுமா...! X-தளத்தில் 100 மில்லியன் ஃபலோயர்களை கடந்த PM Modi!

வியாழன் அன்று போராட்டக்காரர்கள் நாட்டின் அரச ஒலிபரப்பிற்கு தீ வைத்ததை அடுத்து போராட்டம் வன்முறையாக மாறியது.  வன்முறை காரணமாக தலைநகருக்குள் உள்ள மெட்ரோ ரயிலை டாக்காவிற்குச் செல்லும் மற்றும் திரும்பும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. நாட்டின் பல பகுதிகளில் மொபைல் இணைய நெட்வொர்க்குகளை முடக்கவும் அரசு உத்தரவிட்டது. பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.

இதை தொடர்ந்து நேற்று வங்கதேசத்தின் இணையதள செய்தி நிறுவனங்கள் சிக்கலை எதிர்கொண்டன. பொழுதுபோக்கு சேனல்கள் வழக்கம் போல் ஒளிபரப்பானாலும் செய்தி தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பாகவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேனல் இயங்கவில்லை என்று கூறப்பட்டது.

வங்கதேத்தின் மத்திய வங்கி, பிரதம மந்திரி அலுவலகம் மற்றும் காவல்துறையின் அதிகாரபூர்வ இணையத்தளங்களும் "THE R3SISTANC3" என்ற குழுவால் ஹேக் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. ஆபரேஷன் ஹன்ட் டவுன், மாணவர்களைக் கொல்வதை நிறுத்து," என்ற செய்திகளும் அதில் இடம்பெற்றன. மேலும் இது போராட்டம் அல்ல, இப்போது இது ஒரு போர். என்ற வாசகங்களும் இடம்பெற்றன.

போராட்டக்காரர்கள் நர்சிங்டி மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலையில் இருந்து நூற்றுக்கணக்கான கைதிகளை விடுவித்த பின், சிறைச்சாலைக்கு தீ வைத்து எரித்தனர்.

Microsoft : முடங்கிய சேவை.. பெரும் சரிவில் Microsoft - சில மணி நேரங்களில் ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு தெரியுமா?

இதற்கிடையில், வங்கதேசத்தில் வன்முறைப் போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க இந்தியா வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது, ஆனால் அண்டை நாட்டில் வசிக்கும் சுமார் 15,000 இந்திய பிரஜைகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தது. வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பேசிய போது " இது வங்கதேசத்தின் உள்விவகாரமாக நாங்கள் பார்க்கிறோம்," என்று கூறினார். வன்முறை போராட்டங்களை இந்தியா எவ்வாறு பார்க்கிறது என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

இதனிடையே இதுவரை வங்கதேசத்தில் இருந்து 125 மாணவர்கள் உட்பட 245 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹசீனாவின் அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் அமெரிக்காவும் வன்முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?