கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 108 பேருக்கு வைரஸ் தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமை உண்மையில் கவலை அளிக்கிறது, நிலைமை கட்டுக்குள் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என லாம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக ஹாங்காங்கில் கட்டுப்பாட்டில் இருந்து வந்த கொரோனா வைரஸ், தற்போது அங்கு வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனால் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருப்பதாக ஹாங்காங்கின் தலைமை நிர்வாக அதிகாரி கேரி லாம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை உலக அளவில் 1 கோடியே 46 லட்சத்து 46 ஆயிரத்து 905 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது, மொத்தம் 6 லட்சத்து 8 ஆயிரத்து 987 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 87 லட்சத்து 37 ஆயிரத்து 852 பேர் தொற்றிலிருந்து மீண்டு குணமடைந்துள்ளனர். உலக அளவில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன.
சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாக கருதப்படும் ஹாங்காங்கில் கொரோனா தற்போது வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. அதாவது, மத்திய சீனாவில் இருந்து கடந்தாண்டு இறுதியில் கொரோனா பரவியபோது பாதிக்கப்பட்ட ஆரம்ப இடங்களில் ஹாங்காங்கும் ஒன்று. ஆரம்பம் முதலே ஹாங்காங்கில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதையொட்டி கடந்த ஜூன் மாத இறுதிக்குள் அங்கு வைரஸ் தொற்று பரவல் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களில் நோய்த்தொற்று அங்கு மீண்டும் அதிகரித்துள்ளது. சுமார் 7.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஹாங்காங்கில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருவது கவலையை ஏற்படுத்துவதாக ஹாங்காங் மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹாங்காங் தலைமை நிர்வாக அதிகாரி கேரி லாம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களிடம் பேசிய அவர், இதுவரை ஹாங்காங்கில் மொத்தம் 1,886 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 108 பேருக்கு வைரஸ் தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமை உண்மையில் கவலை அளிக்கிறது, நிலைமை கட்டுக்குள் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என லாம் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று தீவிரமாகி வருவதையடுத்து, கடந்த வாரம் முதல் சமூக இடைவெளி கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என லாம் அறிவித்துள்ளார். நோய்த் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் பார்கள், ஜிம்கள் மற்றும் இரவு நேர விடுதிகள் உட்பட பல வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. அனைவரும் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். உணவகங்கள் மாலை நேரத்தில் மட்டுமே உணவுகளை பார்சல்களில் மட்டும் வழங்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொருவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டியது கட்டாயம் எனவும் அத்தியாவசிய மற்றும் அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.ஏற்கனவே சீனா கொண்டுவந்துள்ள புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் ஹாங்காங் மக்களை பெருந்துயரத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், தற்போது அங்கு கொரோனா தாக்கம் தீவிரமாகி வருவது ஹாங்காங்கை நிலைகுலையவைத்துள்ளது.