அரைக்கம்பத்தில் தேசிய கொடி..! கண்ணீரில் சீன மக்கள்..!

By Manikandan S R SFirst Published Apr 4, 2020, 1:52 PM IST
Highlights

மூன்று மாதங்களாக கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி இருந்த சீனா அதிலிருந்து தற்போது மீண்டு இருக்கும் நிலையில் இன்று அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. 

உலகம் முழுவதும் கொடிய நோயான கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரையில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் உலகளவில் பலி எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. சீனா, இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான் என உலகில் 203 நாடுகளில் கொரோனா வைரஸ் மெல்ல கால்பதித்து தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஒட்டுமொத்த உலகத்தையும் இன்று ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் முதன்முதலாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவில் தோன்றியது. சீனாவின் மத்திய நகரமான வூஹானில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அந்நாட்டில் 81 ஆயிரம் மக்களை பாதித்துள்ளது. இன்றைய நிலவரப்படி 3,326 மக்கள் கொரோனாவால் பலியாகி இருக்கின்றனர். 76 ஆயிரம் பேர் சிகிச்சை முடிந்து கொரோனாவில் இருந்து நலம் பெற்று வீடு திரும்பி இருக்கும் நிலையில் தற்போது அங்கு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. போக்குவரத்துக்கள் அனைத்தும் மீண்டும் செயல்பாட்டுக்கு வர தொடங்கி மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

மூன்று மாதங்களாக கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி இருந்த சீனா அதிலிருந்து தற்போது மீண்டு இருக்கும் நிலையில் இன்று அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. சீன தேசம் முழுவதும் அந்நாட்டின் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விட்டு பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பல்வேறு இடங்களில் நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. பொது மக்கள் பெருந்திரளாக கூடாமல் சமூக விலகலை கடைபிடித்து உயிரிழந்தவர்களுக்கு கண்ணீருடன் தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

click me!