இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து சீனா வந்தவர்களில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 464 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், ஈரான், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா ஆகிய நாடுகளில் கோர முகத்தை காட்டிவருகிறது. கொரோனாவால் சீனாவில் 82 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. வுகான் நகரம் முழுமையாக சீல் செய்யப்பட்டிருந்தது. சீன அரசின் தடுப்பு நடவடிக்கைகளால் கொரோனா வைரஸின் தாக்கம் கணிசமாக குறைந்தது. இதையடுத்து வுகான் நகரில் விதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து தடை 76 நாட்களுக்குப் பிறகு கடந்த 8ம் தேதி நீக்கப்பட்டது. சற்றே நிம்மதி பெருமூச்சுவிட ஆரம்பித்த சீனர்கள் தற்போது மீண்டும் அச்சத்தின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர்.
சீனாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், கடந்த 6 வாரங்களில் இல்லாத அளவிற்கு அங்கு புதிதாக கொரோனா தொற்று பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சீனாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசுகிறதோ என்று உலக நாடுகளில் சந்தேக அலை பரவியது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து சீனா திரும்பி வரும் நபர்களால் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி நேற்று ஒரே நாளில் 89 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதில் 3 பேர் மட்டுமே உள்நாட்டவர்கள் ஆவர், மீதமுள்ள 86 பேர் வெளிநாடுகளில் இருந்து சீனாவிற்கு திரும்பியவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து சீனா வந்தவர்களில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 464 ஆக அதிகரித்துள்ளது.