உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் நோயின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சீன நாட்டின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அங்கு 3,300 உயிர்களை பறித்து தற்போது கட்டுக்குள் வந்திருக்கிறது. சீனாவில் மெல்லமெல்ல இயல்புநிலை திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் உலகின் மற்ற நாடுகளில் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது.
அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், ஈரான், ஜெர்மனி என உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் நாசத்தை விளைவித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,26,235ஐ எட்டியிருக்கும் 1,19,729 நிலையில் மக்கள் பலியாகி இருக்கிறார்கள். கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு 13,56,263 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 51,720 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.இதனால் இனிவரும் நாட்களில் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் இருக்கிறது.
கொரோனாவின் வீரியம் தொடர்ந்து உயர்ந்த போதிலும் பூரண நலம் பெற்று 4,52,402 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் நோய்க்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்காததால் நாளுக்கு நாள் அதன் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதை கட்டுப்படுத்த முடியாமல் ஒட்டு மொத்த உலகமும் திணறி வருகிறது. கொரோனாவின் தாக்குதலில் இருந்து தப்ப உலகின் பெரும்பான்மை நாடுகளில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. உலக அளவில் அதிகபட்சமாக வல்லரசு நாடான அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்து 23 ஆயிரத்து 500 பேர் பலியாகி இருக்கின்றனர்