பாகிஸ்தான் எல்லையை ‘சீல்’ வைக்கும் இந்தியாவின் முடிவு நியாயமற்றது - சீனா கடும் விமர்சனம்

First Published Oct 12, 2016, 5:43 AM IST
Highlights


பாகிஸ்தான் எல்லையை அடுத்த சில ஆண்டுகளில் முழுமையாக சீல் வைப்போம் என இந்தியா எடுத்துள்ள முடிவு முற்றிலும் நியாயமற்றது என சீன அரசின் ஊடகமான ‘குலோபல் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.

ராஜ்நாத்சிங்

உரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பின் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2018-ம் ஆண்டுக்குள் 3,323 கி.மீ. பாகிஸ்தான் எல்லை சீல் வைக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்தியாவின் இந்த முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அரசு ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

நியாயமில்லாதது

ஷாங்காய் அகாதெமியின் சர்வதேச உறவுகள் தொடர்பாக ஆய்வு செய்து வரும் ஹூ ஹியாங் ‘குளோபல் டைம்ஸ்’ நாளேட்டில் கூறுகையில், “ உரி ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பின்புலம் யார் இருக்கிறார்கள் என்பதை முழுமையாக விசாரிக்காமல், எந்த ஆதாரமும் இல்லாமல் பாகிஸ்தான் தான் காரணம் என இந்தியா குற்றம்சாட்டியது. இப்போது எல்லையை சீல் வைக்கும் முடிவு என்பது நியாயமில்லாதது. ஏற்கனவே வர்த்தகம் மற்றும் இருதரப்பு பேச்சு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முடிவு மேலும் நிலைமையை மோசமடையச் செய்யும்'' எனத் தெரிவித்திருந்தார்.

பனிப்போர் மனநிலை

ஷாங்காய் முனிசிபல் மையத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய கல்வி அமைப்பின் இயக்குநர் வாங் தேஹா கூறுகையில், “ எல்லையை சீல் செய்யும் இந்தியாவின் முடிவு இரு தரப்பு அமைதி நடவடிக்கைகளையும் பாதிக்கும். இந்தியா முடிவு பனிப்போர் மனநிலையில் இருப்பதை பிரதிபலிக்கிறது. மேலும், இருதரப்பு கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் பகுதியில் வாழும் மக்களுக்கு இடையே ஆழ்ந்த மனவேதனையை இது உருவாக்கும்.

சிக்கலாக்கும்

அனைத்து சூழலிலும் பாகிஸ்தானுடன் சீனா நிர்வாக ரீதியாக கூட்டாளி, நட்பு நாடாகும். எல்லை சீல் வைக்கும் முடிவு இந்தியா-சீனா, பாகிஸ்தான் இடையிலான உறவுகளை சிக்கலாக்கும். காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதியான முறையில் இருநாடுகளும் தீர்வு காண்பதையே சீனா விரும்புகிறது'' எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கோவா மாநிலத்தில் அடுத்த வாரம் தொடங்கும் பிரிக்ஸ் நாடுகள் உச்சிமாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வந்து பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். இந்த சூழலில் இதுபோன்ற கருத்துக்களை சீன ஊடகம் வெளியிட்டுள்ளது.

 

click me!