
குடும்பத்துடன் பயணிக்காத நபர்களுக்கு விமானங்களில் குழந்தைகளின் சத்தம் இடையூறு ஏற்படாமல் இருக்க, சில வழித்தடங்களில் "வயது வந்தவர்களுக்கு மட்டும்" பிரத்யேகமான பகுதியை ஒரு விமான நிறுவனம் வழங்குகிறது.
துருக்கி, நெதர்லாந்து இடையே விமான சேவையை வழங்கிவரும் கோரெண்டன் ஏர்லைன்ஸ் (Corendon Airlines) நிறுவனம் குழந்தைகள் இல்லாத சூழலை விரும்பும் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பயணிகளுக்கு இந்த வசதியை வழங்க திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், அந்த விமான நிறுவனம் பயன்படுத்தும் ஏர்பஸ் ஏ350 விமானங்களில் சில இருக்கைகள் தனியாக ஒதுக்கப்படும். வரும் நவம்பர் மாதம் ஆம்ஸ்டர்டாம் மற்றும் டச்சு கரீபியன் தீவான குராக்கோ இடையே இயக்கப்படும் விமானத்தில் இந்த வசதி தொடங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
சூப்பர் புளூ மூன் பார்க்க நீங்க ரெடியா? அபூர்வ வானியல் நிகழ்வு... ஆகஸ்ட் 30 இல் மிஸ் பண்ணாதீங்க!
"விமானத்தில் உள்ள இந்த 18+ பகுதி குழந்தைகள் இல்லாமல் பயணிக்கும் பயணிகளுக்காகவும், அமைதியான சூழலில் பயணிக்க விரும்பும் வணிகப் பயணிகளுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று விமான நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதி குழந்தைகளுடன் பயணிக்கும் பெற்றோருக்கும் சாதகமானதாக இருக்கும் என்றும் அந்த நிறுவனம் சொல்கிறது. பெற்றோர் தங்கள் குழந்தை அழும்போதோ அல்லது ஏதேனும் சேட்டைகள் செய்யும்போதோ சக பயணிகளிடமிருந்து ஏற்படக்கூடிய எதிர்வினைகளைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் அவர்கள் பயணிக்கலாம் என்று கூறுகிறது.
இந்த சிறப்புப் பகுதி விமானத்தின் மற்ற பகுதிகளிலிருந்து தடுப்புச் சுவர்கள் மற்றும் திரைச்சீலைகள் மூலம் தனியாகப் பிரிக்கப்படும். "அமைதியான மற்றும் நிதானமான விமானப் பயணத்திற்கு வழிவகுக்கும் சூழல் உருவாக்கப்படும்" என்று கோரெண்டன் நிறுவனம் தெரிவிக்கிறது.
இஸ்ரோவின் ஆதித்யா எல்1 சூரியனுக்கு எவ்வளவு அருகில் செல்லும்? என்னென்ன ஆய்வுகள் செய்யும்?
வயது வந்தவர்களுக்கான பகுதி விமானத்தின் முன் பகுதியில் உருவாக்கப்படும். கூடுதலாக ஒன்பது பெரிய இருக்கைகள், லெக்ரூம் மற்றும் 93 வழக்கமான இருக்கைகள் ஆகியவை இருக்கும் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இருக்கைகளுக்கு கூடுதலாக 45 யூரோ (49 டாலர் அல்லது 4,050 ரூபாய்) கொடுக்க வேண்டும். இதேபோல பெரிய இருக்கைகளுக்கு கூடுதலாக 100 யூரோ (108 டாலர் அல்லது 8,926 ரூபாய்) செலவாகும்.
விமானத்தில் இதுபோன்ற ஒரு புதுமையான விஷயத்தை அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் கோரெண்டன் ஏர்லைன்ஸ் அல்ல. ஆனால், நெதர்லாந்தில் முதல் நிறுவனமாக இருக்கலாம்.