சீனாவின் புதிய வரைபடத்தில் அருணாசலப் பிரதேசம்; ஜி20 மாநாட்டுக்கு முன்பு இந்தியாவை உசுப்பும் பீஜிங்!!

By Dhanalakshmi G  |  First Published Aug 29, 2023, 11:52 AM IST

டெல்லியில் ஜி 20 மாநாடு நடப்பதற்கு இன்னும் ஒரு வார காலமே இருக்கும் நிலையில் அருணாசலப் பிரதேசத்தை சீனா உரிமை கொண்டாடி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


டெல்லியில் வரும் செப்டம்பர் 9, 10 ஆகிய இரண்டு நாட்கள் ஜி 20 மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி  ஜின்பிங் கலந்து கொள்வதாக செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் சீனா தற்போது வெளியிட்டு தனது அதிகாரபூர்வ 2023ஆம் ஆண்டுக்கான வரைபடத்தில் அருணாசலப் பிரதேசத்தை உரிமை கொண்டாடி இருப்பது சுமூகமான உறவுக்கு பங்கம் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கடந்த வாரம் தென் ஆப்ரிக்காவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு இருந்தனர். இவர்களது சந்திப்பு நடந்த மறுநாளே சீனா அருணாசலப் பிரதேசத்தை உரிமை கொண்டாடி வரைபடத்தை வெளியிட்டு இருந்தது. இது மட்டுமின்றி, சீனாவின் வரைபடத்தில் அக்சாய் சின் பிராந்தியம், தைவான், தென் சீன கடல் ஆகியவற்றையும் உரிமை கொண்டாடி உள்ளனர்.

Tap to resize

Latest Videos

சந்திரயான்-3 முதல் ஆப்பிள் ஈவென்ட் வரை.. YouTube-ல் அதிகம் பார்க்கப்பட்ட லைவ் ஸ்ட்ரீம்கள் எவை தெரியுமா?

தொடர்ந்து சீனா அருணாசலப் பிரதேசத்தை உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கு அமெரிக்காவும்  எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. அருணாசலப் பிரதேசம் இந்தியாவுக்கு சொந்தமானது என்று தெரிவித்து இருந்தது. இந்தியாவும் சீனாவுக்கு தொடர்ந்து கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. எப்போதும் இந்தியாவின் ஒரு அங்கமாக அருணாசலப் பிரதேசம் இருந்து வருகிறது என்று தெரிவித்து வருகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்து இருக்கும் மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர், ''இந்தியாவைப் பார்த்து சீனா பொறாமை அடைந்துள்ளது. அதனால் இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியும், ஜி ஜின்பிங்கும் சந்தித்துக் கொண்ட மறுநாளே இதுபோன்ற வரைபடத்தை வேண்டும் என்றே வெளியிட்டுள்ளனர். உலகம் முழுவதும் சட்டவிரோதமாக நாடுகளை ஆக்கிரமித்து வருகிறது சீனா'' என்று தெரிவித்துள்ளார். 

சூப்பர் புளூ மூன் பார்க்க நீங்க ரெடியா? அபூர்வ வானியல் நிகழ்வு... ஆகஸ்ட் 30 இல் மிஸ் பண்ணாதீங்க!

சீனா அதிகாரபூர்வமாக புதிய வரைபடத்தை கடந்த திங்கள் கிழமை வெளியிட்டுள்ளது. இந்த வரைபடத்தை சீனாவின் குளோபல் டைம்ஸ் நாளிதழும் வெளியிட்டுள்ளது. இந்த வரைபடத்தில் தென் சீனக் கடல்,  திபெத், அக்சாய் சின் ஆகியவற்றையும் உரிமை கோரியுள்ளது. 1962ஆம் ஆண்டில் போர் நடந்தபோது அக்சாய் சின் பகுதியை சீனா ஆக்கிரமித்து இருந்தது. 

ஏற்கனவே தென் சீனக் கடல் பகுதியை உரிமை கொண்டாடி வரும் சீனாவுக்கு பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே, தைவான் ஆகிய நாடுகளும் தென் சீனக் கடல் பகுதியை உரிமை கொண்டாடி வருகின்றன.  

டெல்லியில் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் ஜி 20 மாநாடு நடக்கிறது. இந்த முறை இந்தியா இந்த மாநாட்டை நடத்துகிறது. இந்த மாநாட்டில் ஜி 20 உறுப்பு நாடுகள் அனைத்தும் பங்கேற்கின்றன. சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சீனா இந்த வரைபடத்தை வெளியிட்டு இருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

click me!