சிங்கப்பூரில் நடைபெற்ற டிராவல் எக்ஸ்போ பயணக் கண்காட்சியில் இந்த ஆண்டு சுமார் 100,000 பேர் பங்கேற்றனர். பெரும்பாலான பயணர்களின் முக்கிய தேர்வாக ஐரோப்பிய நாடுகள் இடம்பிடித்துள்ளன.
சிங்கப்பூர் சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் ஏராளமான டிராவல் ஏஜென்சிக்கள் ஸ்டால் அமைத்திருந்தன. இந்த ஆண்டில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமானோர் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டோடு (2022) ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 30 சதவீதத்திற்கும் அதிகமாக பயணிகள் வரத்து இருந்ததாக டிராவல் ஏஜென்சி நிறுவனங்கள் சில தெரிவித்தன.
இந்த டிராவல் எக்ஸ்போ 2023யில் பெரும்பாலும், முதியவர்களே அதிகளவில் வருகை தந்துள்ளனர். மூத்த மக்களுக்கு ஏற்றவாறே டிராவல் ஏஜென்சிக்களும் பயணத் திட்டங்களை வடிவமைத்திருந்தன. ஐரோப்பிய நாடுகளும், சீனாவுமே பயணிகள் பலரின் விருப்பத் தேர்வாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிக பணம் கொடுத்து, மேற்கொள்ளும் இதுபோன்ற பயணத்தை முதியவர்களுக்கு இனிய பயண அனுபவமாக்கப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மூத்த மக்களுக்கு ஏற்றவாறு, வெளிப்புற நடவடிக்கைகள் அதிகமில்லாமல், உள்நாட்டு சுற்றுலாத்தலங்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது.
சிங்கப்பூர்.. லாரியில் பயணிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.. இந்த நிலை மாறவே மாறாதா? - முதலாளிகள் சொல்வதென்ன?
நியாயமான கட்டணங்கள், சுத்தமான தங்குமிடம், சுவையான உணவு, இதமான தட்பவெப்பம் போன்றவையே பலரின் முதல் விருப்பத்தேர்வாக இருந்தது.
பாதுகாப்பும், பொறுப்பான பயண முகவரும் போன்ற காரணங்கள் அடுத்தகட்ட விருப்பமாக இருந்தது. இளைஞர்களுக்கும், முதியவர்களுக்கும் ஏற்றவாறு பல்வேறு சுவாரஸ்ய பயணத் திட்டங்களை டிராவல் ஏஜென்சி நிறுவனங்கள் அமைத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.