உலக அமைதிக்காக இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும் என்று வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் அந்நாட்டு பாரம்பரிய முறைப்படு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றும் முக்கிய நிகழ்வும் இன்று நடைபெற உள்ளது.
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி புதன்கிழமை யோகா தினத்தை முன்னிட்டு, நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் 180 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். இந்த நிகழ்வுக்குப் பின், சிறப்பு விமானம் மூலம் வாஷிங்டன் டிசிக்குச் சென்ற பிரதமர் மோடி, தேசிய அறிவியல் அறக்கட்டளைக்குச் சென்றார். அங்கு அந்நாட்டின் முதல் பெண்மணி ஜில் பைடன் அளித்த பிரத்யேக வரவேற்பை ஏற்றார். அங்கு இருவரும் பங்கேற்ற கலந்துரையாடலும் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை வெள்ளை மாளிகைக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு 19 துப்பாக்கி குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இருநாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. பின்னர் அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியை வரவேற்றுப் பேசினார். உலக சூழ்நிலையை முன்னிட்டு இந்தியாவும் அமெரிக்கா இணைந்து செயல்படுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி! 19 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வரவேற்பு!
பின்னர் சிறப்பான வரவேற்பு கொடுத்த அதிபர் ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்துப் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர், "இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் ஜனநாயக விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டவை" என்று கூறினார்.
மேலும், இரு நாடுகளின் அரசியலமைப்புகளும் 'We the people' (மக்களாகிய நாம்) என்ற வார்த்தைகளுடன் தொடங்குகின்றன. இரு நாடுகளும் தம் பன்முகத்தன்மையில் பெருமிதம் கொள்கின்றன. கோவிட் சகாப்தத்திற்குப் பிறகு, உலகம் ஒரு புதிய வடிவத்தை எடுத்து வருகிறது. உலகளாவிய நன்மை, உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக, ஒன்றாகச் செயல்பட உறுதிபூண்டுள்ளோம்" என்று கூறினார்.
விண்வெளியில் மாஸ் காட்ட இஸ்ரோ - நாசா இடையே புதிய ஒப்பந்தம்!
"இன்று பிற்பகல், அமெரிக்க காங்கிரஸில் இரண்டாவது முறையாக உரையாற்றும் வாய்ப்பைப் பெறுகிறேன். அதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்... இந்தியாவின் மூவர்ணக் கொடியும், அமெரிக்கக் கொடியின் நட்சத்திரமும், கோடுகளும் புதிய உயரங்களைத் தொட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் மோடியின் இந்தப் பயணத்தின் இடையே, இந்திய விமானப்படைக்கு (IAF) போர் விமானங்களைத் தயாரிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்தாகியுள்ளது. இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்துடன் அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் விண்வெளி பிரிவு இடையேயான இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஜெனரல் எலக்ட்ரிக் ஏரோஸ்பேஸின் F414 இன்ஜின்களை இந்தியாவில் கூட்டாகத் தயாரிப்பது உள்ளிட்ட அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவிலேயே ஜெட் எஞ்ஜின்களைத் தயாரிக்க அமெரிக்காவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பிரதமர் மோடி இரண்டாவது முறையாக அமெரிக்க காங்கிரஸின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். உலக அளவில் வெகு சில வெளிநாட்டுத் தலைவர்கள் மட்டுமே இதுபோன்ற கூட்டுக் கூட்டத்தில் இரண்டு முறை உரையாற்றியுள்ளனர். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த உரையைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் அவருக்கு இரவு விருந்து நடைபெறும்.
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய மூத்த குடிமக்களுக்கு 50% தள்ளுபடி!