ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார் பிரதமர் மோடி... உணவு, எரிபொருள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை!!

Sep 17, 2022, 12:02 AM IST

உக்ரைனில் தவித்த மாணவர்களை மீட்பதற்காக உதவிய ரஷியா மற்றும் உக்ரைனுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். உஸ்பெகிஸ்தான் நாட்டில் இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். பின்னர் பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார். அப்போது, இந்தியாவும் ரஷியாவும் பல ஆண்டுகளாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இன்றைய சகாப்தம் போருக்கானது அல்ல. அமைதிப் பாதையில் எவ்வாறு நாம் முன்னேறலாம் என்பதைப் பற்றி பேச இன்று நமக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தியா - ரஷியா இரு நாட்டு விஷயங்கள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து நாம் பல முறை தொலைபேசியில் பேசியிருக்கிறோம். உணவு, எரிபொருள் பாதுகாப்பு மற்றும் உரங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு காணும் வழியை கண்டுபிடிக்க வேண்டும். உக்ரைனில் தவித்த மாணவர்களை மீட்பதற்காக உதவிய ரஷியா மற்றும் உக்ரைனுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன் என்று தெரிவித்தார். பின்னர் ரஷ்ய அதிபர் புதின், நாளை பிறந்த நாள் காணும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.