தேர்தல் முடியட்டும்; ஓபிஎஸ் பாஜகவில் இணைவார்.. இதுதான் மேட்டர்… ஆருடம் சொன்ன ஜெயக்குமார்!!

Apr 14, 2024, 12:13 AM IST

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேராதரவோடு, வேட்பாளர் ராயபுரம் மனோவிற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். விடியா அரசில் மக்கள் நிறைய துன்பங்களுக்கு ஆளாகின்றனர். மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட விடியா திமுக அரசின் மக்கள் விரோத செயலால் மக்கள் திமுக மீது கோபத்தில் உள்ளதாக தெரிவித்தார்.

கச்சத்தீவு பிரச்சனை காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை விடியா திமுக அரசு தாரை வார்த்து கொடுத்ததாக குற்றம் சாட்டினார். எப்போதுமே தமிழகத்தின் உரிமையை காக்க பாடுபடுவது அதிமுக தான். தமிழக மீனவர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் தொழில் செய்ய வேண்டும், பாஜக , திமுக அரசுகள் மாநில உரிமையை மீட்காமல், கச்சத்தீவு, காவிரி விவகாரம் உட்பட நமது உரியையை விட்டு கொடுத்ததாக திமுகவை விமர்சித்தார். 

ஆளும் திமுக அரசு மக்களை ஏமாற்றி தமிழக மக்களுக்கு பட்டை நாமத்தை சாத்தி விட்டதாகவும் கூறினார். ''அண்ணாமலை காவல் துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர். கச்சத்தீவு வரலாற்றை அவர் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வரும் இயக்கம். பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு வாய் கொழுப்பு அதிகமாக உள்ளது.  டிடிவி தினகரன் ஆர்.கே நகரில் தெரு தெருவாக பிரசாரம் பண்ண முடியுமா? ஆர் கே நகர் தேர்தலில் டிடிவி தினகரன் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றி சென்றவர். மத்திய அரசு ஊழல் வழக்கு போட்டு விடுவார்கள் என அஞ்சி பாஜகவுடன் டிடிவி கூட்டணி வைத்துள்ளார். 

''அண்ணாமலை என்று போர்டு போட்டு கிளி ஜோசியம் பார்க்கும் வேலை செய்யலாம். அவர் முதலில் தன்னுடைய கட்சியை பார்க்க வேண்டும். அதிமுக கட்சியை தனதாக்கி கொள்ளலாம் என்று டிடிவி, ஓபிஎஸ் நினைத்தால் இலவு காத்த கிளியின் கதையாக தான் முடியும். யாருக்காக இந்த மத்திய அரசு/ மோடி அரசு இருக்கிறது? எல்லா மிட்டா மிராசுதாரர்கள், கோடீஸ்வரர்களுக்காக தான் இருக்கிறது. சாதாரண மக்கள் 10 ஆயிரம் வங்கியில் கடன் வாங்கினால் எத்தனை முறை கேட்கிறார்கள்.

''ஆனால் 10 லட்சம் கோடி கடன் வாங்கியவர்களுக்கு கடனை தள்ளுபடி செய்கிறார்கள். அந்தப் பணத்தை வசூலித்தால் இந்தியாவின் கடனை அடைத்து விடலாம் என தெரிவித்தார். 10 ஆண்டுகளில் எந்த வளர்ச்சியும் இந்தியாவில் பாஜக செய்யவில்லை. நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு ஓபிஎஸ், பாஜகவுக்கு போய் விடுவார். ஏதாவது ஒரு மாநிலத்தில் அவருக்கு ஆளுநர் பொறுப்பு கொடுப்பார்கள்'' என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.