மூதாட்டிக்கு சொல்லாமல் திமுகவுக்கு ஓட்டு போட்ட தேர்தல் அலுவலர்.. போராட்டத்தில் குதித்த பாஜக.. கோவையில் பரபர

Apr 19, 2024, 9:07 PM IST

கோவை மாவட்டம், அன்னூர் அருகே பிள்ளையப்பம்பாளையம்  ஊராட்சிக்குட்பட்ட  பிள்ளையப்பம்பாளையத்தில் பூத் எண் 95ல் வாக்குச்சாவடி மையம் பொதுமக்கள் வாக்களிக்க அமைக்கபட்டது.  இந்த மையத்தில் பிள்ளையப்பம்யாளையத்தை சேர்ந்த 105 வயது மூதாட்டி அங்காத்தாள்  தனது பேரன் சண்முகசுந்தரத்துடன் வாக்களிக்க வந்துள்ளார். அப்போது வாக்கு பதிவு மையத்தில் பூத் சிலிப் சரிபார்ப்புக்கு பின் வீல் சேரில் அழைத்துச் சென்று வாக்களிக்க அழைத்து செல்லபட்டார். மூதாட்டி வயதானவர் என்பதால் அங்கு பணியில் இருந்த தேர்தல் அலுவலர் செந்தில் என்பவர் பாட்டியின்‌ ஆலோசனை இல்லாமல் அவரே தன்னிச்சையாக திமுகவுக்கு வாக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை பார்த்த மூதாட்டியின் பேரன் சண்முகசுந்தரம் தான் சார்ந்த கட்சியினரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் தகவலறிந்த சம்பவ இடத்தில் திரண்ட பாஜகவினர் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து தேர்தல் அதிகாரி செந்திலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாக்குப்பதிவு முடிந்தும் வாக்கு பெட்டியை எடுத்து செல்ல அனுமதிக்க முடியாது,  தவறு செய்த  அதிகாரி  மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை பெட்டியை எடுத்து செல்ல அனுமதிக்க முடியாது என்று கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் சுமார் 2மணி நேரத்திற்கு மேலாக வாக்குப்பெட்டிகளை எடுத்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து அங்கு வந்த அன்னூர் போலீசார் பாஜக நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல்  அன்னூர் ஒன்றியத்தில் இன்று கவுண்டன்பாளையம் ஊராட்சி கெம்பநாயக்கன்பாளையத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரே வாக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.