கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக, "முதலமைச்சர் குறுகிய மனப்பான்மையுடன், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறார்" என நடிகர் விஜய் விமர்சித்தது குறித்துக் கேட்டபோது, சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: "யாருடைய மனப்பான்மை குறுகியது என்பதை நாடே பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. 41 பேர் இறந்த துயரச் சம்பவத்தில், ஒரு நிமிடம் கூட நிற்காமல் சென்னைக்குத் திரும்பி தன் இல்லத்தில் அமர்ந்துகொண்டாரா அல்லது இரவு முழுவதும் தூங்காமல் மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, இறந்தவர் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கி, உலகமே பாராட்டும் அளவுக்குச் செயல்பட்டாரா எங்கள் முதலமைச்சர்? கொடூரமான எண்ணம் இருந்திருந்தால், அந்த 41 பேர் இறப்புக்குக் காரணமானவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்திருப்பார்கள். ஆனால், 'எந்தத் தலைவரும் தன் தொண்டர்களைக் கொலை செய்ய நினைக்க மாட்டார்கள்' என்று எவ்வளவு பெருந்தன்மையுடன் முதலமைச்சர் கூறியுள்ளார். இதைச் சிறுமைப்படுத்துபவர்கள் சிறுமைப்பட்டுப் போவார்கள்," என்றார். மேலும், "தைரியம் இருந்தால் விஜயைக் கைது செய்திருக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அப்படிச் செய்திருந்தால், 2026-ல் அவருக்காக ஒரு புரட்சியே வெடித்திருக்கும். முதலமைச்சர் அரசியல் நாகரிகம் கருதி அவ்வாறு செய்யவில்லை," என்றும் குறிப்பிட்டார்